தைப்பூசத் திருநாளிலே…

தைப்பூசத் திருநாளிலே…

முருகப் பெருமான் ஆண்டிக்கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும்போது, அன்னை பார்வதி தேவி அசுரர்களை அழிப்பதற்காக ஞானவேல் வழங்கிய திருநாளே தைப்பூசமாகும். தேவர்களின் படைத்தளபதி பொறுப்பேற்று அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை இந்நன்னாளில் வணங்கி வழிபட, எந்தவிதமான கெட்ட சக்திகளும் நம்மை அணுகாது என்பது நிச்சயம்.

‘வந்த வினையும், வருகின்ற வல்வினையும்

கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே

செந்தில் நகர் சேவகா என திருநீறு

அணிவோர்க்கு மேவ வாராதே வினை!’

இந்தியாவில் பழனி, திருச்செந்தூர், வடலூர் ஆகிய இடங்களில் மிகவும் விமரிசையாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் ஈழம், மலேசியா (பத்துமலை), பிணங்கு, ஈப்போ, சிங்கப்பூர், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா (விக்டோரியா) போன்ற பல நாடுகளில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஈழத்தில் தைப்பூசம்: யாழ்ப்பாண மக்கள் அதிகாலையிலெழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து. பிறகு ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் இவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று சூரிய பகவானை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க, மற்றவர் முற்றிய சில புது நெற்கதிர்களை அறுத்தெடுத்து வீட்டுக்குக் கொண்டு வருவார்.

குடும்பத் தலைவி அதைப் பெற்று சுவாமி அறையில் வைத்து, நெல்மணிகளை எடுத்து உமி நீக்கி, அந்த அரிசியை பசும்பாலுடன் கலந்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழத்தை அதில் இட்டு, குடும்பத்தினருக்குப் பரிமாறுவார்கள். மீதமுள்ள அரிசியை மற்ற அரிசியுடன் சேர்த்து மதிய உணவு செய்வர். பால் குடம் மற்றும் காவடியெடுத்து முருகன் கோயில் சென்று வழிபட்டு தத்தம் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

மலேசிய பத்துமலை முருகன் கோயில்: தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயம் இது. கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுண்ணாம்பு பாறைகளாலான மலையாகும் இது. மலையை ஒட்டி ஓடும் சுங்கை பத்து ஆற்றில் பக்தர்கள் குளித்து நேர்த்திக்கடன் செலுத்த அலகு குத்தியும், பால் குடம் மற்றும் காவடியெடுத்தும் வருகின்றனர். கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து, அதிகாலையில் புறப்பட்டு, ஊர்வலமாக பத்துமலைக் கோயிலுக்கு 272 படிகள் ஏறி முருகப் பெருமானை வணங்கி வழிபடுகிறார்கள். மலேசியாவில் தைப்பூசத் திருநாள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தைப்பூசம்: இங்குள்ள முருகர் கோயிலில் வேல்தான் மூலவர். பாலபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். முருகர் வெள்ளித்தேரில் அமர வைக்கப்பட்டு லயன் சித்தி விநாயகர் கோயில் வரை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மாலை தேர் மீண்டும் கோயிலை வந்து அடையும். சீனர்களும் வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தைப்பூச தினத்தன்று பக்தர்கள் விதவிதமான காவடிகளை சுமந்து கொண்டு முருகப் பெருமானை தரிசிக்க வருகின்றனர். அவற்றில் சிறப்பு வாய்ந்த காவடிகளாகக் கூறப்படுபவை, மயிலிறகைக் கொண்டு செய்யப்படுவது - மயில் காவடி. பக்தர்கள் பால் குடம் ஏந்தி நடைப்பயணமாக முருகனை தரிசிக்க வருவது பால் காவடி. விளக்கினை கைகளில் ஏந்தியபடி காவடி எடுத்து வருதல் விளக்கு காவடி. உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு வருவது சந்தனக் காவடி. பறவை போன்று அலகு குத்திக்கொண்டு தொங்கியவண்ணம் வருவது பறவைக் காவடி. காவடியின் இருபுறமும் சிறு குடங்களில் தேன் நிரப்பி சுமந்து வருவது தேன் காவடி. நாக்கு, கன்னம் மற்றும் உடம்பின் சில பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய வேல் வடிவ ஊசியால் குத்திக்கொண்டு வருவதை அலகு குத்துதல் என்பர். சிலர் சிறியதாக ரதம் போன்ற வண்டியை பக்தர்கள் முதுகில் கொக்கிகளால் இணைத்து, இழுத்து வருவதும் உண்டு.

தைப்பூச சிறப்புகள்: இரணிய வர்மன் என்ற அரசன் சிதம்பரத்துக்கு வந்து அரும்பெரும் நற்பணிகள் செய்து நடராஜரை வணங்கி வழிபட, நேரில் இறைவன் காட்சியளித்த நாள் தைப்பூசமாதலால், சிவன் கோயில்களிலும் இன்று சிறப்பு அபிஷேங்களும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் ‘பூசம்’ என்பதால் இன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தருவதாகும்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இந்நன்னாளில் ஒளி வடிவாகியதால், அவர் ஒளியான வடலூருக்கு அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில், இன்று லட்சக்கணக்கான மக்கள் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

முருகப்பெருமான் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு இன்று பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவபெருமான் உமா தேவியுடன், ஆனந்த நடனமாடி, தரிசனமளித்த நாள் தைப்பூச தினமாகும்.

தைப்பூசப் பழைமை: தைப்பூசம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் கூறப்பட்டுள்ளது.

‘பொருந்திய தைப்பூசமாழ் உலகம்

பொலிவெய்த’ என திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

பிற்கால சோழர் ஆட்சியில், குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தையொட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடைபெற்றுள்ளன என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தைப்பூச நன்னாளில் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே உபவாசம் இருந்து முருகப் பெருமான் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் கூறி வழிபடலாம்.

‘வெற்றிவேல் முருகனுக்கு… அரகரோகரா!’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com