திருச்செந்தூர் மாசி திருவிழா!

திருச்செந்தூர் மாசி திருவிழா!

திருச்செந்தூர் மாசி மகம் திருவிழா நாளை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. இந்தத் திருவிழாவில் மாசி மாதப் பெளர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும்.

மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை 25ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும்.

நாளை மறுநாள் 26 ம் தேதி 2ம் நாள் திருவிழா. இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி குமாரவிடங்கபெருமாள் புறப்பாடு நடைபெறும்.

மூன்றாம் நாள் திருவிழாவாக காலை சுப்பிரமணியர் பூங்கோயில் சப்பரத்திலும் அம்பாள் கேடயத்திலும் உலா வருவர். இரவு சுவாமி தங்கக் கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வருவர்.

நான்காம் நாள் காலை முருகன் வெள்ளை யானை சப்பரத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் பவனி வருவர்.

ஐந்தாம் நாள் மெல்ல கோவில் குடவரவாயில் தீபாராதனையும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் மாட வீதிகளில் வலம் வருவர்.

ஆறாம் நாள் திருவிழாவாக முருகன் கோ ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பந்தல் மண்டபம் வருவார். இரவு அம்பாள் வெள்ளி தேரில் இந்திர விமானத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.

ஏழாம் நாள் மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டும் பிரதான உத்ஸவர் சண்முகக் கடவுள் காட்சி தருவார். ஏழாம் நாள் அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் சண்முகப் பெருமானின் உருகு சட்ட சேவை நடைபெறும். காலையில் சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் தரிசனம் தருவார். மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில், சிவப்புப் பட்டாடை அணிந்து, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். இது சிவபெருமானின் அம்சக் காட்சியாகும்.

எட்டாம் நாள் திருவிழா காலையில் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சண்முகர் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இது பிரம்மனின்அம்சக் காட்சியாகும். பகல் 12 மணிக்கு மேல் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். இது திருமாலின் அம்சக் காட்சியாகும்.

ஒன்பதாம் நாள் திருவிழாவில் சுவாமி கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா வருவர்.

பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெறும். பதினொன்றாம் நாள் இரவு தெப்ப உத்ஸவம் நடைபெறும். பன்னிரெண்டாம் நாள் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com