தில்லையில் திருவாதிரை திருவிழா!

தில்லையில் திருவாதிரை திருவிழா!

ம்பலத்தரசன், ஆடவல்லான், ஆனந்தக்கூத்தன், மூவரும் தேவரும் காணா முக்கண் முதல்வன், நால்வரும் பாடிய நற்றமிழின் நாயகன், பஞ்சவரில் பார்த்தனுக்கு அருள் செய்து, படைக்கலமாக பாசுபதம் வழங்கிய பரமன், தான் வீற்றிருக்கும் மாமலையினை மமதையுடன் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணனை மன்னித்துப் பெருங்கருணையுடன் பேரும், நாளும், வாளும் வழங்கிய வள்ளல், வியாக்ரபாத முனிவரின் மகன் உபமன்யு பசித்து அழுதபோது தேவ லோகத்திலிருந்து காமதேனுவையோ நந்தினியையோ பாலுக்காக அனுப்பாமல் பாற்கடலையே அனுப்பி வைத்த பரம தயாளன், ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடும்போது, தன் கரங்களால் தாளமிட, 'சம்பந்தனின் பிஞ்சுக்கரங்கள் வலிக்குமே!' என்று மனம் துடித்து பொற்றாளம் வழங்கி மகிழ்ந்த பெருமான்…

நாவுக்கரசர் முதிர்ந்த வயதில் தலங்கள் தோறும் யாத்திரை செய்தபோது, பசி மயக்கத்துடன் தளர்ந்த வேளையில் தயிர் சோறும் நீரும் சுமந்து வந்து பரிமாறி களைப்பு நீக்கிய கருணைக் கடல், சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்த வாக்கினை மீறியதால் அவருடைய கண்களைப் பறித்தாலும் திருஆரூரில் அவர் பொருட்டு பரவை நாச்சியாரின் இல்லம் தேடி நடந்து இல்லறத்தை நல்லறமாக்கி வைத்த அருளாளன், மாணிக்கவாசகரின் பொருட்டு, காட்டு நரிகளைக் கவின்மிகு குதிரைகளாக ஆக்கியதோடு அல்லாமல், அவற்றை ஓட்டிக் கொண்டு மாட மாமதுரையின் திருவீதிகளில் வலம் வந்து மன்னன் அளித்த மாலை மரியாதைகளை ஏற்றுக்கொண்டு மறுநாளே அவனிடம் பிரம்படி ஏற்றருளிய சோமசுந்தரன், உலகுக்கெல்லாம் படியளக்கும் பரமசிவமானாலும், உதிர்ந்த பிட்டு உண்ண ஆசை கொண்டு வந்தியம்மையின் அன்பின் முன் கையேந்தி நின்ற நிமலன், சேந்தனாரின் திருப்பல்லாண்டுக்காக அவர் வீட்டுக்குச் சென்று திருவாதிரைக் களி உண்டவன்… இப்படி ஒன்றா… இரண்டா…? பரமனின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்!

ப்படியெல்லாம் அன்பர்களுடன் திருவிளையாடல் புரிந்தவன்! அன்பர்களை ஆட்டி வைத்தவன்! அவர்தம் அல்லல் எல்லாம் ஓட்டி வைத்தவன்! ஆனந்தக் கோலாகலத் திருநடம் காட்டி வைத்தவன்! நம் பொருட்டு இன்று (5 ஜனவரி) தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்தில் மார்கழித் தேரோட்டம் காணா உள்ளான். 'என்னைக் காண நீ வராவிட்டால் என்ன! நானே உன்னைத் தேடி வருகின்றேன்!' என வாஞ்சையுடன் வள்ளல் பெருமான் தேரில் திருவீதி எழுந்தருள ஆயிரமாயிரமாய் அன்பர்கள் ஐயனைக் கண்டு இன்புற்றிருக்கின்றனர்.

நடராஜப்பெருமான் சிவகாமசுந்தரியுடன் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். பத்தாம் நாளாகிய திருவாதிரையன்று வைகறையில் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். நாளை நடராஜப்பெருமானுக்கு திருமஞ்சனம். கோயில் எனப்படும் திருச்சிற்றம்பலத்தின் ஆயிரங்கால் மண்டபத்தில் யாகசாலை ஹோம பூஜைகளுடன் அற்புதமான மஹாபிஷேகம் நிகழ்வுறும். அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் நிறைவுற்ற பின்னர் பலவிதமான மலர்களால் புஷ்பாஞ்சலியும், அலங்கார மூர்த்தியாகத் திகழும் எம்பெருமானுக்கு அர்ச்சனைகளும் மஹா தீப ஆராதனையும் நிகழ்வுறும். அதன்பின் எம்பெருமானும் சிவகாமசுந்தரியும் ஆனந்த நடனம் புரிந்தபடியே மீண்டும் சித்சபைக்கு எழுந்தருள்வர்.

அனைத்து சிவாலயங்களிலும் நடராஜர் சன்னிதியில் மார்கழி திருவாதிரை வைபவம் விசேஷமாகக் கொண்டாடப்படும். சைவ நெறிகளின்படி கோயில் என்றால் அது தில்லை திருச்சிற்றம்பலம்தான்! எல்லா சிவாலயங்களின் கலைகளும் இங்கே ஒருங்கிணைவதாக ஐதீகம். திருச்சிற்றம்பலம்தான் சித்சபை. எம்பெருமான் நடராஜ மூர்த்தி (உருவம்), சிதம்பர ரகசியம் (அருவம்) ஸ்படிக லிங்கம் (அருவுருவம்) ஆகிய மூன்று நிலைகளில் இங்கே திகழ்கின்றனர். இந்த மார்கழி திருவாதிரை நாளில் அருளாளர்களாகிய நம் முன்னோர், தம் திருவாக்கில் அருளியபடி ஆனந்தக்கூத்தனை இதயக் கமலத்தில் தரிசித்து இன்புறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com