இன்று அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை – அதனால் என்ன?

இன்று அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை – அதனால் என்ன?

ந்த தேதியைப் பார்த்தவுடனே இன்றைய பொழுது நன்றாகப் போகவேண்டுமே என்று அதிகமாக அச்சமடைபவர்கள் உண்டு. தேதி மட்டும் அல்ல பதின்மூன்று என்ற எண்ணைக் கண்டாலே அச்சம்.

பதிமூன்று பற்றிய அளவுக்கு மீறிய அச்சத்திற்கு ஆங்கிலத்தில் “ட்ரைஸ்கைடேகபோபியா” (Triskaidekaphobia) என்பார்கள். பதின்மூன்றாம் தேதியை துரதிருஷ்ட நாளாக ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் கருதுவர். ஒரு மாதத்தில் பதின்மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வந்துவிட்டால் இந்த அச்சம் இரட்டிப்பாகும். அந்த நாள் அபசகுனம் என்று எண்ணுவர். இந்த பயத்தை ஆங்கிலத்தில் “பரஸ்கைவிடேகட்ரியபோபியா” (Paraskevidekatriaphobia) என்று சொல்வார்கள்.

பன்னிரெண்டு நபர்கள் கலந்து கொள்ளும் விருந்தில், 13வது நபர் கலந்து கொண்டால், அதில் ஒருவர் ஒரு வருடத்திற்குள் உயிரிழப்பர் என்ற மூடநம்பிக்கை பரவ ஆரம்பித்தது. இதற்கு அந்த கால நாடோடிக் கதைகளிலிருந்தும், ஏசுகிறிஸ்துவின் வரலாற்றிலிருந்தும்  உதாரணம் அளிக்கிறார்கள்.

நோர்ஸ், ஸ்காண்டிநேவியன் புராணங்களின் படி, கடவுளர்களின் இருப்பிடமான வல்ஹால்லாவில் விருந்து நடந்து கொண்டிருந்தது. அந்த விருந்திற்கு 12 கடவுளர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது 13ஆது அழையா விருந்தினராக லோகி என்ற மற்றவர்களை ஏமாற்றி மகிழும் கடவுள் கலந்து கொண்டார். அவர், இருட்டின் கடவுளான ஹோடோர் என்பவரை, மகிழ்ச்சியின் கடவுளான பால்டர் மேல் அம்பு எய்தும் படித் தூண்டினார். அதில் பால்டர் இறந்து விட உலகில் இருள் சூழ்ந்தது.

ஏசுகிறிஸ்துவின் கடைசி இரவு விருந்து நடைபெற்றது ஒரு வெள்ளிக்கிழமையில். அந்த விருந்தில் பதின்மூன்று பேர் கலந்து கொண்டனர். பதின்மூன்றாவதாக கலந்து கொண்ட ஜூடாஸ்தான், ரோமன் அதிகாரிகளிடம் ஏசுகிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தார். சாத்தானின் தூண்டுதலில் தடை செய்யப்பட்ட ஆப்பிளை ஏவாள், ஆதாமிற்கு, கொடுத்தது வெள்ளிக்கிழமை அன்றுதான் என்ற கருத்தும் உண்டு.

Triskaidekaphobia
Triskaidekaphobia

ஒரு சில ஐரோப்பிய நகரங்களிலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் சில அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும், தங்கும் விடுதிகளிலும் பதின்மூன்றாவது மாடி இருக்காது. விடுதிகளில் அறை எண் பதிமூன்று இருக்காது. அதற்கு பதிலாக, 12ஏ, 14 என்று அறை எண்கள் மாற்றப் பட்டிருக்கும். சில விமானங்களில் 13வது வரிசை, மற்றும் 13வது எண் உள்ள இருக்கை இருப்பதில்லை. சில மின் தூக்கிகளில் 13 என்ற எண்ணைப் பார்க்க முடியாது.

அமெரிக்கா 1970வது வருடம், ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, சந்திரனில் தரையிறங்க மூன்று விண்வெளி வீர்ர்களுடன் அபோலோ 13 என்ற விண்கலத்தைச் செலுத்தியது. ஆனால் ப்ராணவாயுத் தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டு ப்ராணவாயு விண்ணில் கலந்ததனால் வீரர்கள் சந்திரனில் கால் பதிக்க முடியவில்லை. உலகமே விண்வெளி வீரர்களுக்குப் ப்ரார்த்தனை செய்ய, மிகுந்த சிரமத்துடன் “நாசா” வீரர்களை பூமிக்குக் கொண்டு வந்தது மிகப் பெரிய சாதனை. இந்த நிகழ்வும் 13 பற்றிய அச்சத்தை அதிகமாக்கியது. அபோலோ13 வீர்ர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சாதனை 1995ல் திரைப்படமாக வந்தது.

இந்தியர்களைப் பொறுத்தவரை பதின்மூன்று பற்றிய அச்சம் பொதுவாக இல்லை. அமாவாசை, பௌர்ணமி கழிந்த பதின்மூன்றாவது நாளை வடமொழியில் த்ரயோதசி என்பார்கள். இது சிவனுக்கு உகந்த நாள் என்றும், இந்த நாளில் சிவனை வழிபட்டால் செல்வம், குழந்தைகள், மகிழ்ச்சி, செழிப்பு ஏற்படும் என்று நம்பிக்கை. ப்ரதோஷம் என்று சிவத்தலங்களில் இந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கணிதத்தில் எண்13 பிரதம எண் எனப்படும். அதாவது இந்த எண் 1 மற்றும் 13 தவிர மற்ற வேறு ஒரு எண்ணினாலும் வகுபடாது. எண் கணித சாஸ்திரத்தில் தேதி 13ல் பிறந்தவர்க்கு எண் 1ன் பலனும், 3ன் பலனும், 4ன் பலனும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com