உடுக்கை ஒலி!

உடுக்கை ஒலி!

டுக்கை என்றும், தமருகம் என்றும் அழைக்கப்படும் சின்னஞ்சிறு இசைக்கருவி, ஆனந்த தாண்டவம் நிகழ்த்தும் சிவபெருமானின் கரத்தில் இருப்பதைக் காணலாம். இதன் ஒலியில் இருந்தே, சமஸ்கிருத இலக்கணத்தை பாணிணி வகுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. ‘உடுக்கை பிறந்ததம்மா ருத்ராட்ச பூமியிலே’ என்று குறிப்பிடும் மாரியம்மன் தாலாட்டு. பைரவர், தட்சிணாமூர்த்தி, மாரியம்மன் என பல்வேறு தெய்வ முர்த்திகளின் கரங்களில் நாம் காண்கின்ற இசைக்கருவி இது. இதன் ஒலியிலிருந்தே பிரபஞ்சம் தொடங்குகிறது என்றும் சொல்வார்கள்.

கிராமக் கோயில்களிலும், சமயச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக்கருவி உடுக்கை. மரத்தால் அல்லது உலோகத்தால் ஆனது இதன் உடல் பாகம். இருபுற வட்டங்களிலும் மாட்டுத் தோலினை இழுத்து வைத்து இணைத்திருப்பர். இடை சிறுத்து இருபுற வட்டமும் விரிந்து பருத்திருக்கும். இதனை இடை சுருங்குப்பறை என்றும், துடி என்றும் குறிப்பிடுகின்றனர். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் ஓலைச்சுவடிகளில் உடுக்கை என்பது டமருகம் என்று பதிவாகியுள்ளது. உடுக்கைக்கு மாற்றுப்பெயர் முத்திரை எனப்படுவதும் உண்டு. பொதுவாக, சொல்வழக்கில் உடுக்கை அல்லது கோடாங்கி.

உடுக்கை எனும் கிராமிய இசைக் கருவியை இசைத்துப் பாடப்படும் கலையே உடுக்கைப் பாட்டு. கிராமியப் பாடல் இசைத் தட்டுகளில், உடுக்கை ஓசைக்குப் பெரும் பங்கு அமைந்துள்ளது. அண்ணன்மார் சாமி கதை, காத்தவராய சுவாமி கதை, மதுரை வீரசுவாமி கதை போன்றவை உடுக்கைப் பாட்டுகளாக கதை இசை மரபில் தொன்றுதொட்டு உலவி வருகின்றன. உடுக்கடித்து பாடத் தொடங்கிவிட்டால், மணிக்கணக்கில் பாடிக்கொண்டிருக்கும் ஆற்றல் பெற்ற பூசாரிகள் பலர் உண்டு.

உடுக்கைப் பாடலின்போது, முதலிலிருந்து இப்படித்தான் தொடங்கி அடுத்தடுத்து பாடித் தொடர வேண்டும் என்பது மரபு. முதலில் குருநாதரை அழைப்பார்கள். அடுத்து விநாயகரைத் துதிப்பார்கள். எல்லை தெய்வத்தையும் அடுத்து கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமியையும் அழைத்து, இஷ்ட தெய்வங்களை வரிசை கட்டிப் பாடி, அதன்பின்னரே எவர் உடுக்கை அடித்து குறி கேட்க வந்துள்ளாரோ, அவரது குலதெய்வத்தை அழைத்து உடுக்கைப் பாடலைத் தொடர்வார்கள் பூசாரிகள்.

இதில் குலதெய்வம் சட்டெனவோ தாமதமாகவோ வெளிப்படாதவர்கள், மறுநாள் வருவார்கள். மறுநாளும் குலதெய்வம் வெளிப்படவில்லை என்றால், வேறு உடுக்கடி பூசாரியினைத் தேடிச் செல்வார்கள். மேலும் தமது குலதெய்வம் எதுவென்றே தெரியாதவர்கள், உடுக்கு அடித்து குறிகேட்டு தெரிந்து கொள்ளலாம்.

“சித்துடுக்கும் பிரம்பும்

சிவன் கொடுத்த முத்திரையும்

மாசி பெரியண்ணா மக மேரு கூட வர

மாதமோ ராத்திரியில்

மாசி சிவராத்திரியில்

சிவனுக்கு ராத்திரி

சிவராத்திரியில் அன்று

தீபம் ஏற்றிவைத்து

திருவிளக்கு ஒளி குடுத்து

சிவன் கொடுத்த முத்திரையில்

குறி சொல்ல வாராரே...

என்னை வாழவைக்கும் கேணியடி கருப்பு

கேட்ட குறி சொல்ல வாராரே...”

என்று கம்பீரமாக உடுக்கைப் பாடல் ஓசை காற்றில் கலந்து வந்தது, ஸ்ரீரங்கம் செல்லாயி அம்மன் கோயிலிலிருந்து.

உடுக்கைப் பாடல் இசைத்துப் பாடியவர், ரெத்தினம் பூசாரியார். முப்பத்தைந்து ஆண்டுகளாக உடுக்கை அடித்துப் பாடி வருபவர். பூவாளூரில் தங்கியிருந்தவரை பதினாறு வயதில், ஸ்ரீரங்கம் மேட்டுத் தெரு கேணியடி கருப்பு கனவில் தோன்றி, அவரை இங்கு அழைத்து வந்துள்ளது. மேட்டுத் தெரு கிருஷ்ணனும், ரெத்தினம் பூசாரியும் பூவாளூரிலிருந்து 35 கி.மீ. தூரம் நடந்து வந்தே, அன்றைக்கு ஸ்ரீரங்கத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

குருநாதரிடம் பயின்று முத்திரை வாங்க வேண்டும். குருநாதர்தான் உடுக்கையை எடுத்துத் தன் சீடரிடம் தருவார். ஓமாந்தூர் மாசி பெரியண்ணசாமி கோயிலில், மாசி மாத சிவராத்திரியன்று கோயில் பூசாரியிடம் உத்தரவு பெற்று, அவர் உடுக்கை எடுத்துத் தந்த பின்னரே, ஒரு பூசாரியானவர் வெளியே சென்று உடுக்கை அடித்துப் பாடி குறிசொல்ல வேண்டும். இது இன்றளவும் கடைபிடித்து வரப் படுகிறது. ஆண்டுதோறும் தற்போதும், மாசி சிவ ராத்திரியன்று தமிழ்நாடு முழுவதுமிருந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட உடுக்கடி பூசாரிகள் ஓமாந்தூரில் கூடுகின்றனர்.

“தமிழ்நாட்டில் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உடுக்கை தயார் செய்கிறார்கள். வேங்கை உடுக்கை, பலா உடுக்கை, வெண்கல உடுக்கை என மூன்று வகை உடுக்கைகள் உள்ளன. இதில் வெண்கல உடுக்கை கும்பகோணத்தில் மட்டுமே தயார் செய்யப்படுகிறது. இதில் அதிகப் பயன்பாட்டில் இருப்பது வேங்கை உடுக்கைதான். வெண்கல உடுக்கையைக் காட்டிலும் வேங்கை உடுக்கையே விலை சற்று அதிகம்.

பொன்னர் - சங்கர் கதை பாடும்போது, உடுக்கு இல்லாமல் கதை வராது. வீரப்பூர் படுகளம் திருவிழாவின்போது சுமார் முந்நூறு உடுக்கடி பூசாரிகள், மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவில் சுமார் நூறு உடுக்கடி பூசாரிகள், சமயபுரம் சித்திரைத் தேர் அன்றைக்கு கிரகம், அக்னிச்சட்டி ஏந்தி வருபவர்களுக்கு சுவாமி அழைப்பதற்கென சுமார் ஆயிரக்கணக்கான உடுக்கடி பூசாரிகள் சமயபுரத்தில் திரண்டிருப்பார்கள். தற்போதும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் உச்சிக்கால பூஜையின் போது உடுக்கை ஓசையுடன்தான் பூஜை நிறைவேற்றப்படுகிறது.

பிடாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், கருப்பு கோயில், அய்யனார் கோயில், காமாட்சியம்ன் கோயில் போன்றவற்றி லெல்லாம்  உடுக்கடி பூசாரிகள் இருப்பார்கள். இதில் கிளி ஜோசியர்களின் உடுக்கடியானது எதற்கும் உட்பட்டதல்ல. ஆனால், கோயிலில் உடுக்கு அடிக்கும் பூசாரிகளுக்கு வரம்பும் உண்டு, பாரம்பரியமும் உண்டு. அவர்கள் மாமிசம் உண்ணக் கூடாது. மது அருந்துதல் கூடாது. ஒழுக்கமாக வாழ வேண்டும். அதுபோன்ற உடுக்கடி பூசாரிகளின் குறிகள் உண்மையாகவே பலிக்கும்!” என்கிறார் ரெத்தினம் பூசாரியார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com