தப்பை ஒப்புக்கொள்ளும் பெரிய மனது!

தப்பை ஒப்புக்கொள்ளும் பெரிய மனது!

ஸ்ரீ காஞ்சி பரமகுரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மகாபெரியவாராதனை தினம் இன்று. ‘தவறு என்பது தவறி செய்வது; தப்பு என்பது தெரிந்து செய்வது’ என்பார்கள். யாரோ செய்த ஒரு தப்பை, அது தம் மூலம் நடைபெற்றது என்ற ஒரே காரணத்துக்காக, அந்தத் தப்புக்கு தாமே பொறுப்பு என்று கூறி, வருந்துவது எவ்வளவு பெரிய விஷயம். இன்றைய தினத்தில், ‘லோககுரு’ என அழைக்கப்படும் காஞ்சி மகாபெரியவரே அப்படி ஒரு தப்புக்கு தாமே பொறுப்பேற்று பேசிய சம்பவத்தைக் காண்போம்.

கும்பகோணத்தில் ஒரு மிகப்பெரிய பணக்கார செட்டியார். அவர் வயிற்று வலியால் மிகவும் துடித்தார். டாக்டர்கள் அவரைக் காப்பாற்ற வழியில்லை என்று கூறியதால், அவர் ஸ்ரீ மகாபெரியவாளை தரிசிக்க வந்தார். வந்தவர், ஸ்ரீ பெரியவாளிடம் நூறு மாங்கல்யங்களைக் கொடுத்து, “இதை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்துவிடுங்கள்” என்றார்.

“இது எதற்கு?” என்றார் ஸ்ரீ பெரியவா.

“என்னமோ தெரியவில்லை, இதை ஏழைகள் யாருக்காவது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது” என்று சொல்லிவிட்டு, அவர் போய்விட்டார்.

‘இந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்த மகாபெரியவர், வேதபுரி என்பவரை அழைத்து, அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அடுத்து, ஸ்ரீ கண்டன் என்பவரை அழைத்து அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அவரும், “மாட்டேன்” என்று கூறிவிட்டு சென்று விட்டார். இறுதியில் பாலு என்பவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் மகாபெரியவர்.

ரு நாள் திருநெல்வேலியிலிருந்து ஒரு சமையல்காரர் வந்தார். அவர், ‘பாலு மாமா’ என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தார். நான் என்னிடம் இருப்பதைக் கொஞ்சம் தாராளமாக மற்றவர்களுக்குக் கொடுப்பேன் என்பதால் அவர் என்னை அடிக்கடி சந்திப்பது உண்டு.

அவர், “பாலு மாமா நான் மடத்தில் கைங்கர்யம் செய்திருக்கேன். என் மகளுக்கு கல்யாணம். கொஞ்சம் ஒத்தாசை வேணும்” என்றார். நானும் ஸ்ரீ பெரியவாளிடம், “இவர் பெண்ணுக்குக் கல்யாணமாம்” என்றேன்.

"சரி… அவனுக்கு ஏதாவது பார்த்து செய்" என்றார் மகாபெரியவர். நான் புடைவை, வேஷ்டி கொடுத்தேன். ஆனால் மகாபெரியவரோ, “திருமாங்கல்யம் கொடு” என்றார்.

நான் அவரிடம் இரண்டு திருமாங்கல்யமும் 2000 ரூபாய் ரொக்கமும் கொடுத்தனுப்பினேன்.

ரண்டு மூன்று மாதம் கழித்து அவரது பெண் அழுது கொண்டே ஸ்ரீ மடத்துக்கு ஓடி வந்தாள். காரணம் தெரியவில்லை.

“வா… ஏம்மா அழறாய்?” என்றேன்.

"எனக்கு ஸ்ரீ பெரியவா திருமாங்கல்யம் கொடுத்தார். என் வீடு ரொம்ப வறுமையில் இருக்கு. சாப்பிடக்கூட வசதியில்லை. அதனால் இந்தத் திருமாங்கல்யத்தை அடகு கடையில் வைக்கப்போனேன். கடைக்காரர் இது தங்கமில்லை, செப்பு என்கிறார். எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு. என் மாமியாரும், கணவரும் இது தெரிந்தால் என்னை அடிப்பார்கள். அதனால்தான் இங்கு ஓடி வந்தேன்” என்று கூறி அழுதாள்.

அதைக்கேட்ட ஸ்ரீ பெரியவா, “இரண்டு பெஞ்ச் கொண்டு வா” என்றார். அதை ஒரு மேடை மாதிரி செய்து அதில் ஏறி நின்றார். ஸ்ரீ பெரியவாளுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது. "அவன் (செட்டியார்) தங்கமில்லை, செப்பு என்று சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டமில்லை" என்று சொல்லிக்கொண்டே, "டேய் பாலு… பக்கத்துல இருக்கிற கடைக்குப் போய் திருமாங்கல்யம் வாங்கிண்டு வா" என்றார்.

நானும் இரண்டு செட் திருமாங்கல்யம், இரண்டு குண்டு வாங்கி வந்தேன். அதை, ஸ்ரீ பெரியவா அந்தப் பெண்ணிடம் ஆசி வழங்கிக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் மகாபெரியவாளை நமஸ்கரித்து, அதை வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.

நான்கு நாட்கள் கழித்து ஸ்ரீ பெரியவாள் ஜயந்தி வந்தது. அன்று மக்களுக்கு தரிசனம் கொடுக்க ஸ்ரீ பெரியவா ஒரு மேடை மீது ஏறி நின்றார். எல்லோர் முன்னிலையிலும், "நான் தப்பு செய்துவிட்டேன். ‘நான் தெய்வம்… சங்கராசார்யார்’ என்று எல்லோரும் நம்பி வருகிறீர்கள். நான் தங்கம் என்று நினைத்து ஒருவருக்கு செம்பைக் கொடுத்துவிட்டேன்” என்றார்.

யார் செய்த தப்பை யார் ஏற்பது? ஸ்ரீ பெரியவா யாரோ செய்த தப்பை தாமே ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு எப்பேர்பட்ட ஒரு பெரிய மனது இருக்க வேண்டும்? ஒரு விஷயம் தப்பாக தம் மூலம் அது நடக்கிறது என்றால், அந்தத் தப்பை தாமே பொறுப்பேற்ற வேண்டும் என்பதில் மகாபெரியவா கவனமாக இருந்தார் என்பதை விளக்கவே இந்த செய்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com