சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்!
‘சித்திரை மாதம் பெளர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்...Chitraguptaம்...ம்...ம்!’
என்ன ஒரு அழகான பாடல்! தமிழ் மகள் சித்திரை அழகாக, ஆனந்தமாக பிறந்ததைத் தொடர்ந்து வரும் சித்திரை பெளர்ணமியை மக்கள் கொண்டாடும் அழகே அழகு.
சிலப்பதிகார குறிப்பொன்றின்படி, சித்ரா பெளர்ணமி தினம் பலர் கடற்கரை, நீர்நிலைகளருகே கூடி, அங்குள்ள மணலில் உறல் தோண்டி அதற்கு ‘திருவுறல்’ எனப் பெயரிட்டு, இறைவனை நினைத்து வலம் வருவார்கள். இம்மாதத்தில் கிடைக்கும் முக்கனிகளாகிய மா, பலா, வாழை போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து வணங்கி வழிபட்டு மற்றவர்களுக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
மேலும், கிராமப்புறத்து வீடுகளில் வசிக்கும் மக்கள் முழுநிலவு தோன்றியதும், அவரவர் வீட்டு வாசல்களில் கோலமிட்டு பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதற்கு சந்தனம் - குங்குமப் பொட்டு மற்றும் அருகம்புல் வைத்து வணங்குவது வழக்கம். ஒரு வாழை இலையை முறத்தின் மீது பரத்தி அதில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல், பருப்பு வகைகள், காய்கறிகள், மாங்காய் - தேங்காய் வைப்பார்கள். தேங்காயை இரண்டாக உடைத்து பின்னர் தூப - தீபம் காட்டி வழிபடுவார்கள்.
மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுத்து எமதர்மராஜனிடம் சேர்ப்பிக்கும் தேவலோக பிரதிநிதி சித்ரகுப்தனுக்கும் சித்ரா பெளர்ணமியன்றுதான் பூஜை நடைபெறுகிறது. காஞ்சிபுரத்திலிருக்கும் சித்ரகுப்தருடைய தனிக்கோயிலுள்ள சிலையின் ஒரு கையில் ஏடும், மறு கையில் எழுத்தாணியும் உள்ளன. சித்ரா பெளர்ணமியன்று, இந்திரனே இங்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம். சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்துவரும் பலர் இன்று விரதமிருந்து அன்னதானம் செய்வார்கள். மேலும்,
‘சித்திர குப்தம் மஹா பிராக்ஞம்
லேகனீபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்!’
என்கிற ஸ்லோகம் கூறி, சித்ரகுப்த வரலாற்றையும் படிப்பார்கள். ‘சித்ரகுப்த’ என்கிற வடமொழிச் சொல்லுக்கு, ‘மறைந்துள்ள படம்’ என்று பொருள். மக்கள் செய்யும் குற்றங்களைச் சித்திரம் போல ரகசியமாக தனது மனதினுள் நிலை நிறுத்திக்கொள்ளும் காரணத்தால், ‘சித்ரகுப்தன்’ என்கிற பெயர் அவருக்கு ஏற்பட்டதெனக் கூறப்படுகிறது. ஒருவரது நடத்தையை மறைந்திருக்கும் சக்தி ஒன்று எப்போதும் கவனிக்கிறதென்பதை இது உணர்த்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பெளர்ணமி நாளில் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.
சித்ரா பெளர்ணமியன்று, நாம் கடைப்பிடிக்கும் விரதத்தாலும், சடங்குகளாலும், தேவதைகள் மகிழ்ந்து நமது செயல்களை மிகுந்த பரிவுடன் கவனிக்கின்றன. பெளர்ணமி விரதம் மூலம், அறியாமையால் செய்யும் தவறுகள் நீங்கும்.
சித்ரா பௌர்ணமி தினமாகிய நாளை (5.5.2023) இந்தியா மற்றும் நேபாளில் கௌதம புத்தர் அவதரித்த நாளாக புத்த ஜயந்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இது விடுமுறை தினமாகும்.
புத்தபிரானை கடவுளாக எண்ணி வணங்குபவர்களும், பௌத்த பிட்சுகளும் பொதுவாக தூய்மையாக வெண்ணிற ஆடை அணிந்து புத்தர் கோயில்களுக்குச் சென்று மலர்களையும் மெழுகுவர்த்திகளையும் அர்ப்பணிப்பது வழக்கம். அசைவ உணவுகளை அன்றைய தினம் தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுவதோடு, ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை வழங்குவார்கள். புத்தம் சரணம் கச்சாமி!
சித்ரா பெளர்ணமியைக் கொண்டாடுங்கள்; சித்ரகுப்தனை வணங்குங்கள்!