சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றாதீர்!

சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றாதீர்!

கோயில்களில் உள்ள நவக்கிரக மண்டப சனீஸ்வர பகவானுக்கோ அல்லது சில கோயில்களில் தனியாக உள்ள சனீஸ்வரர் சன்னிதியிலே வேண்டுதலுக்காக பக்தர்கள் சிலர் எள் தீபம் ஏற்றுவார்கள். எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது தவறல்ல, ஆனால், சிலர் பேர் எள்ளை விளக்கில் போட்டு எண்ணெய் ஊற்றி அதில் தீபம் ஏற்றுவார்கள். இது மாபெரும் தவறாகும். பிணம் எரிக்கும்பொழுது உண்டாகும் வாடைதான் எள்ளு எரியும் பொழுது வெளிப்படும். எனவே கோயிலில் எள் தீபத்தை ஏற்றக் கூடாது. இது தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு ஆகும்.

இப்படிச் செய்யப்படும் வழிபாடு, ஒருவரின் வேண்டுதலையும் தோஷத்தையும் போக்குவதற்கு பதிலாக, அதை இன்னும் அதிகப்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எள் என்பது ஒரு தானியம். அதுவும் அது மகாவிஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்டது என்று கூறுவார்கள். அதை எரிப்பது என்பது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை உணருங்கள். அரிசியைப் போன்றே எள்ளும் ஒரு தானியம். அரிசியை யாராவது வேண்டுதலுக்காகவும் தோஷம் போவதற்காகவும் எரிப்போமா?

மது இந்து மதம், எள்ளை எண்ணெயாக்கி அதைக்கொண்டுதான் தீபமேற்றி பரிகார வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறதே தவிர, எள்ளையே விளக்கில் போட்டு எரிக்கச் சொல்லவில்லை. ஆனால், எள்ளை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது தவறில்லை. நடமாடும் கருணை தெய்வமாம் காஞ்சி மகாபெரியவர் கூட ஒரு சமயம், ‘எள் தீபம் கூடாது’ என்று தெளிவுபடுத்தியும், கோயில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக, வழிபாட்டில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் தூய்மையடைகின்றன. அதே போல், மணிபூரகம், அனாஹதம் ஆகிய இரண்டும் கூட நெய் தீபம் ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை தருவதாகக் கூறப்படுகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. இதில் சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி உடலுக்குக் குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மிகப் பாதையை வகுத்துத் தருகிறது. நல்லெண்ணெய் தீபம் ஏற்ற, சூரிய நாடி சுறுசுறுப்பு அடைகிறது. நெய் தீபம் சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. மொத்தத்தில் நெய் தீபம், சகல விதமான சுகங்களையும் நலனையும் நமக்குத் தருகிறது என்பதுதான் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com