மாசற்ற போகி பண்டிகையைக் கொண்டாடுவது எப்படி?

மாசற்ற போகி பண்டிகையைக் கொண்டாடுவது எப்படி?

மார்கழி மாதத்தின் கடைசி நாளும் பொங்கல் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் விதமாகவும் அமைந்திருப்பது போகி பண்டிகையாகும். இது, குப்பை கூளங்களை நீக்கி வாழ்விடங்களை சுத்தமாக வைக்க வேண்டிய நாளாக அமைகிறது ‘போக்கி’ என்னும் இந்தத் திருநாள். இந்த ‘போக்கி’ என்னும் சொல்லே நாளடைவில் ‘போகி’ என்று மருவி கொண்டாடப்பட்டு வருகிறது. மண்ணையும், அதன் வளத்தையும் காக்க உண்டானது பொங்கல் திருவிழா என்றால், அந்தத் திருவிழாவைக் கொண்டாடத் தயாராக இருக்கும் தலைவாசல் விழாவே போகி பண்டிகையாகும்.

கிராமங்களில் வீட்டின் முன் கூரையில் வேப்பிலை, ஆவாரம் பூ, கரும் துளசி ஆகியவற்றை சொருகி, காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடும் பண்டிகையாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னமும் பல தேசங்களில் பலவிதமான உயிரினங்களுக்கும், அவற்றுக்குத் தேவையான முறையில் உணவிடுவதையும் போகி அன்று முக்கியமான வழிபாடாகவே வைத்திருக்கிறார்கள்.

சரி… போகி என்று பழையனவற்றை எரிக்கும் பழக்கம் எப்படி வந்தது? ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்கிற சொலவடை இன்றுவரை பழக்கத்தில் இருந்து தான் வருகிறது. முன்பெல்லாம் எல்லாவித குறிப்புகளும் பனையோலையில்தான் எழுதப்பட்டு வந்தன. இலக்கியங்களும் புராணங்களும் கூட பனையோலையில்தான் எழுதப்பட்டிருந்தன. இவற்றைப் படித்துவிட்டு, அவரவர் வீட்டில் பரணில் பனையோலைகளை சொருகி வைப்பது வழக்கம்.

மார்கழி மாத கடைசி நாளில், பழைய பனையோலைகளை எடுத்து, அதில் சிதைந்து போன ஏடுகளை நீக்கி, மீதம் இருந்த ஓலைகளை புதிதாகக் கட்டும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். சிதைந்துபோன ஓலைகளில் இருந்த குறிப்புகளை, புதிய பனை ஓலைகளில் எழுதி, அதையும் பத்திரப்படுத்தி மீண்டும் பரணில் வைத்து விடுவார்கள். அடுத்ததாக, சிதைந்துபோன ஓலைகளை தீயில் இட்டுக் கொளுத்துவார்கள். பழையனவற்றைப் போக்கியதால், அன்றைய தினம், ‘போக்கி நாள்’ என்று கொண்டாடப்பட்டு வந்தது. இப்படித்தான் போகி அன்று பழையனவற்றை எரிக்கும் பழக்கம் உண்டானது என்றும் கூறலாம்.

அந்த வழக்கம் இன்று மாறி, போகி அன்று ஏதாவதொன்றை கொளுத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் டயர் போன்றவற்றையெல்லாம் தீயில் இட்டுக் கொளுத்தி, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறார்கள். இதைத் தவிர்த்து, மாசு இல்லா போகிப் பண்டிகையை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com