அளப்பரிய சக்தி தரும் ஐம்பூத சக்தி!

அளப்பரிய சக்தி தரும் ஐம்பூத சக்தி!

தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி வந்தால் எல்லா ஐஸ்வர்யங்களும் கிட்டும். அதுவே பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் இன்னும் கூடுதல் பலன்கள் உண்டு. இவ்வளவு ஏன், இந்த வழிபாட்டால் தேவாதி தேவர்களும் உங்களது வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.

இப்படி தினமும் பூஜை அறையில் விளக்கேற்றும்போது ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை அளிப்பதாகும். மேலும், இந்த நேரத்தில் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு அதற்குரிய மூல மந்திரத்தைச் சொல்லி தியானம் செய்வது இன்னும் சிறப்பானதாகும். இப்படிச் செய்வதன் மூலம் நாம் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்தத் தண்ணீரில் இறங்கும். பிறகு அந்தத் தண்ணீரை குடித்தால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.

அதேபோன்று ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து பூஜை செய்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை கூரையின் மீது ஊற்றி விட்டு மீண்டும் பூஜைக்கு தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் நம் வீட்டில் துர் சக்திகள் ஏதாவது இருந்தால் அவை வெளியேறிவிடும்.

அதேபோன்று நாம் செய்யும் பூஜையின்போது மணி அடித்து சுவாமியை வழிபட்டாலும், தரிசனம் செய்தாலும் துர்சக்திகள் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிடும் என்பது ஐதீகம். அதோடு, தெய்வீக சக்தியும் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்யும். நாம் தினமும் பூஜை அறையில், பூஜை செய்யும் வேளையில் அங்கே ஐம்பூதங்களும் வாசம் செய்ய வேண்டும்.

முதலாவதாக, ஆகாயம் என்பது பூஜை அறையில் வியாபித்து இருக்கும். நிலம் என்பது நம்மைத் தாங்கி நிற்பதாகும். நெருப்பு என்பது நாம் தீபம் ஏற்றும்போது இருக்கிறது. காற்று இயற்கையாகவே அங்கு இருக்கிறது. ஆனால், தண்ணீர் மட்டும் அந்த இடத்தில் இருக்காது. அதனால்தான் நாம் பூஜை அறையில் வழிபடும்போது தண்ணீர் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஐம்பூதங்களின் சக்தி அங்கு வாசம் செய்யும் என்பதும், அதனால் நமக்கு அளப்பரிய சக்திகள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com