மகாபெரியவர் வழங்கிய ஷொட்டு!

மகாபெரியவர் வழங்கிய ஷொட்டு!

காஞ்சி மகாசுவாமிகள் திருவிடைமருதூரில் அப்போது தங்கியிருந்தார்கள். அங்குள்ள மகாலிங்க சுவாமி கோயிலில், ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடல்களைப் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.

“அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ?” உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார் பெரியவா.

ஒரே குரலில், “தெரியாது” என்று பதில் வந்தது.

“அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா, நல்ல ராகத்தோட” என்றார்.

அடுத்த இரண்டு நிமிட நடைக்குப் பிறகு, “இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா?” என்று கேட்டார் மகாபெரியவர்.

அதற்கு உடன் வந்த இருவரும், “ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும்?” என்று சொன்னார்கள்.

பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார். அவரது மனத்திரையில் மாணிக்கவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும்!

“அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன. அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே? ராமமூர்த்தி, திருப்பாவை, திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய்” என்றார் மகாபெரியவர்.

வ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் அதில் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்! அதில் திருவெம்பாவை, திருப்பள்ளிஎழுச்சி, திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

மாநாட்டில் பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை. அதோடு, பாவைப் பாடல் இசைத்தட்டுக்களும் அங்கே அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது. மகாபெரியவா வெறும் உபதேசியார் மட்டும் அல்லர். உபதேசங்களை நடத்திக் காட்டுபவர். ‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? ‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார் மகாபெரியவர்.

அப்புறம் கேட்பானேன்! தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார், ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!

ரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்
மகாபெரியவர். “ஞாபகம் இருக்கா? திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாட மாட்டான்னு சொன்னேளே?” என்றார்.

இது, பெரியவாள் அவர்களுக்குக் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com