மார்கழியில் மகாலட்சுமி பூஜை!

மார்கழியில் மகாலட்சுமி பூஜை!

காலட்சுமி பூஜை மகத்துவமானது. செல்வ வளம் தரும் மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜை செய்தால் அன்னை மகாலட்சுமியின் அருளால் செல்வம் நிறையும். ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை நாளில் மகாலட்சுமி பூஜை, குபேர பூஜை செய்வார்கள். அதேபோல மார்கழி குருவார பூஜை செய்வதால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை கணவன் மனைவி இருவரும் இணைந்து செய்யலாம். இந்த பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த குருவார ஸ்ரீ மகாலட்சுமி விரதம் பற்றி ஸ்ரீபத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மார்கழி மாதம் முதல் வியாழக்கிழமை ஆரம்பித்து ஒவ்வொரு வியாழனன்றும் விரதமிருந்து, கடைசி வியாழனன்று இந்த பூஜையை முடிக்க வேண்டும். இதுதான் குருவார மகாலட்சுமி விரதமாகும். நாள் முழுவதும் உபவாசம், இரவில் மட்டும் சாப்பிடலாம். விரதம் முடியும் வியாழக்கிழமை அன்று ஏழு கன்னிப் பெண்கள் அல்லது சுமங்கலிகளை அழைத்து, பிரசாதம், தாம்பூலம், பழம் கொடுக்கலாம்.

குரு வார விரத பூஜையை செய்வது எப்படி?

வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து ஸ்வஸ்திக் கோலம் அல்லது ஐஸ்வர்ய கோலம் போட வேண்டும். அதன் மீது பலகையை வைத்து நான்கு மூலைகளிலும் கோலம் போட வேண்டும். நடுவில் பச்சரிசி அல்லது கோதுமையை பரப்பி மஞ்சள் மற்றும் குங்குமத்தால் கோலம் போட வேண்டும். பிறகு கலசத்தில் சுத்தமான நீர் நிரப்பி அதில் அருகம்புல், கொட்டைப்பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் போட வேண்டும். மா, பலா, கொய்யா, சப்போட்டா, அரசு, ஆல மரக்கிளைகளை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். மரக்கிளைகள் கிடைக்காதவர்கள் பூச்செடிகளின் கிளைகளைப் பயன்படுத்தலாம். மகாலட்சுமி படம் எந்திரத்தை கலசத்தின் முன்பு வைத்து சந்தனம், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்கலாம். பிரசாதமாக வைக்கப்படுவதில் வாழை மற்றும் பலவகைப்பட்ட பழ வகைகள் மற்றும் பால் அவசியம் வைக்க வேண்டும்.

கலசத்துக்கு முன் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு நிவேதனப் பொருட்களை கலசத்தின் முன் வைக்கவும். அதன்பின் ஆசமனம், சங்கல்பம் செய்து விநாயகர் பூஜையையும், ஸ்ரீ மகாலட்சுமி பூஜையையும் செய்ய வேண்டும். மஞ்சள், குங்குமம், மலர்களால் வழிபட்டு தூப தீப நமஸ்காரம் மற்றும் நைவேத்யம் செய்ய வேண்டும். பூஜையின் முடிவில் மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், ஸ்ரீ மகாலட்சுமி துதி படித்து, ஸ்ரீலட்சுமி விரதத்தின் கதை படிக்க வேண்டும். அதன் பின் ஆரத்தி பாடல்களைப் படித்து ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த பூஜையை காலையில் செய்ய வேண்டும். இரவில் பஞ்சோபசார பூஜை செய்து நைவேத்தியம் அளிக்க வேண்டும். வெற்றிலையும் சிறிதளவு நைவேத்தியத்தை தனியே எடுத்து வைத்திருந்து காலையில் பசுவுக்குக் கொடுக்க வேண்டும்.

டுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை, கலசத்துக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு கலச தீர்த்தத்தை, பூஜை செய்பவர் சிறிது சாப்பிட்டு விட்டு மேலே தெளித்துக் கொள்ள வேண்டும். பின்பு வீடு முழுவதும் தெளித்துவிட்டு, பூஜைக்கு வந்தவர்களுக்கும் தீர்த்தமாகக் கொடுத்து, மீதியை யார் காலடியும் படாத இடத்தில் செடி அல்லது மரங்களுக்கு ஊற்ற வேண்டும். பூஜை செய்யும்போது பயன்படுத்திய அரிசியை, தினமும் சமையல் செய்ய உபயோகப்படுத்தும் அரிசியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடைசி வியாழனன்று பூஜை முடிந்தவுடன், ஒவ்வொரு வியாழனும் சேர்த்து வைத்த பூக்களையும், பூஜித்த கலச தேங்காய், பாக்கு இவற்றை கிணற்றிலோ, கடலிலோ போட வேண்டும். பூஜையில் வைக்கும் பணத்தை பணப்பெட்டியிலோ அல்லது பர்சிலோ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜையின்போது படிக்க வேண்டிய துதி:

‘லஷ்மீம் க்ஷூரசமுத்ர ராஜ தனயாம்

ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்

தாஸீ பூத ஸமஸ்த தேவவநிதாம்

லோகைக தீபாங்குராம்

ஸ்ரீமந் மந்த கடாக்ஷ வந்தே விபவ

ப்ரஹ்மேந்திர கங்காதராம்

த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம்

சரஸிஜாம் வந்தே முகுந்தப் ப்ரியாம்’

பக்தியுடனும் நியமத்துடனும் இந்தப் பூஜை செய்யும் பெண்களை விட்டு மகாலட்சுமியானவள் என்றும் விலகாமல் காப்பாற்றுவாள். தனம், தான்யம், புகழ் மற்றும் பூரண அருள் கிடைக்கும். துக்கம், தரித்திரம் விலகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com