ஒருமுறை தானம் செய்தால் லட்சம் முறை தானம் செய்ததற்கு சமம்!

ஒருமுறை தானம் செய்தால் லட்சம் முறை தானம் செய்ததற்கு சமம்!

ரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். ஆனால், ஒரே ஒரு வேளை உணவின்றி விரதமிருந்து வழிபட்டாலே பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் அற்புதத் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயிலில் இருக்கும் சங்கரநாராயணர் திருக்கோயில் ஆகும். அம்பிகை கோமதியம்மன் இறைவனை நோக்கி விரதமிருந்து வழிபட்ட பெருமைக்குரியது இந்தக் கோயில்.

இத்தலத்தில் ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்யாத மனநிலையும் ஏற்படும் என்று கூறுகிறார்கள் பெரியோர்கள். அதோடு, வாரத்தின் ஏழு நாட்களில் எந்தெந்த நாட்களில் இக்கோயிலில் விரதமிருந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோயிலில் சூரியனை நினைத்து விரதமிருப்பவர்கள் கண் வியாதியின்றி இருப்பார்கள்.

திங்கட்கிழமைகளில் சந்திரனை நினைத்து விரதமிருப்பவர்கள் வாழ்வுக்குப் பின் சிவலோகப் பதவி அடைவர்.

செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்தால் நோய்கள் நீங்கும். மேலும், சனி தோஷ பாதிப்பும் நிவர்த்தியாகும்.

புதன்கிழமைகளில் விரதமிருப்பவர்களும், அவர்களின் சந்ததியினரும் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.

வியாழக்கிழமைகளில் விரதமிருப்பவர்கள் ஆசிரியர் பதவி கிடைக்கப் பெறுவர்.

வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்தால் இந்திரனைப் போன்று செல்வ வளத்துடன் வாழ்வர்.

சனிக்கிழமைகள் தோறும் இத்தல இறைவனை நினைத்து விரதமிருப்பவர்கள் பொறாமை குணங்கள் நீங்கப் பெறுவர். அதோடு, அவர்களின் கொடிய பாவங்கள் யாவும் நீங்கும்.

இது, சங்கரராகிய சிவனும், நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் கோயில் ஆகும். புற்று மண்ணே இக்கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரியது இந்தத் திருத்தலம். இதற்கு, ‘புன்னைவனம் சீரரசை’ என்றும் பெயருண்டு. இந்தக் கோயிலில் ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால், மற்ற கோயில்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. இவற்றை வேத வாக்கியமென நம்புவோர் மோட்ச கதி அடைவர் என்று கூறுகிறார் சூத முனிவர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com