அணைக்குக் காவலான பேச்சியம்மன்!

அணைக்குக் காவலான பேச்சியம்மன்!

தென் மாவட்டங்களில் பெண் தெய்வ வழிபாடு மிகவும் பிரபலம். அந்த வகையில் பேச்சியம்மன் வழிபாடு தோன்றிய இடம், குமரி மாவட்டம் பேச்சிப்பாறை என்று கூறப்படுகிறது. குலசேகரம் எனும் ஊரின் வடக்குத் திசையில் 11 கி.மீ. தொலைவில் பேச்சிப்பாறை எனும் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மதகுப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது பேச்சியம்மன் கோயில். அணையைப் பார்த்தபடி அமைந்துள்ள இந்தக் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் மேற்கே அமர்ந்திருக்கிறாள் பேச்சி அம்மன். கன்னிமூலையில் வலம்புரி விநாயகரும் வடகிழக்குப் பகுதியில் உள்ள அரசமரத்தடியில் நாகராஜாவும் நாககன்னியும் காட்சி தருகிறார்கள்.

பேச்சிப்பாறைப் பகுதியில் காணிப் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். கி.பி.1896ம் ஆண்டு மூலம் திருநாள் ராமவர்மா மகாராஜா, கோதை ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன வசதிக்காக பேச்சிப்பாறை அணையைக் கட்டத் தொடங்கினார். இதன் கட்டுமானப் பொறியாளராக இருந்தவர் ஹாம்ப்ரி அலெக்சாண்டர் மின்சின் எனும் வெள்ளைக்காரர். அப்போது இப்பகுதி மக்கள் இதை எதிர்த்தனர். ஆனாலும் அணை கட்டும் பணி தொடர்ந்தது. இந்த நிலையில் அணையின் கட்டுமானம் இடிந்து விழுந்தது. இதற்கு மலை வாழ் மக்களின் தெய்வமே காரணம் என்றும், அந்த தெய்வத்துக்கு பலி கொடுத்தால் மேற்கொண்டு பணியைத் தொடரலாம் என்று அப்பகுதி மக்கள் சொல்ல, ஒரு பெண்ணை நரபலி கொடுத்தனர். அவ்வாறு பலி கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை அப்பகுதி மக்கள் பேச்சியம்மன் என்று கூறி வழிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இது தவிர, சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. இதை சமநிலைப்படுத்த அகத்திய முனிவர் தென்திசை வருகை தந்தார். அப்பொழுது பேச்சிப்பாறையில் சுயம்புவாகத் தோன்றிய காளியை, அகத்தியர் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அகக்தியர் வழிபட்ட காளி தெய்வம்தான் பேச்சியம்மன் என்றும் ஒரு கதை கூறப்படுகிறது.

வனவாச காலத்தில் பஞ்சபாண்டவர்கள் பேச்சிப்பாறை பகுதியில் வந்து தங்கினர். அப்பொழுது அர்ஜுனனுக்கும் பீமனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணனின் ஆலோசனைப்படி இருவரும் பேச்சியம்மனிடம் நீதி கேட்டுச் செல்ல, அம்மன் வானுக்கும் பூமிக்குமாக நின்று இருவரின் கர்வத்தையும் அகற்றினாள் என்றும் ஒரு கதை கூறப்படுகிறது. பேச்சியம்மன் கோயிலில் முற்காலத்தில் ஆடு, கோழி பலியிடப்பட்டன. காலப்போக்கில் இது மாறி, சைவ பூஜையே செய்யப்படுகிறது.

இக்கோயிலின் பெரிய திருவிழா மாசி மாசம், பரணி நட்சத்திரம் வரும் நாளில் பத்து நாட்கள் நடைபெறும். இந்தத் திருவிழாவில் காணிப்பழங்குடி மக்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இந்த விழாவின்போது கொடியேற்றம், அம்மன் பவனி, அபிஷேகக் குடமெடுத்தல், திருவிளக்குப் பூஜை, புஷ்ப அபிஷேகம், பொங்கல் வழிபாடு, துலாபார நேர்த்திக்கடன், அஷ்ட கந்த கலசநீர் அபிஷேகம், தாந்திரி பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. பத்தாம்நாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.  பேச்சியம்மனுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் பூஜை நடத்தப்படுகிறது. இதுதவிர, பேச்சியம்மனுக்கு வழிபாடு நடத்திய பின்னரே அணையின் மதகு திறப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com