
ஓசூர் அருகே உள்ளது இடையநல்லூர் கிராமம். இங்குள்ள சம்பன்னி பீரேஸ்வரர் கோயில் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. தற்போது இக்கோயில் புனரமைக்கப்பட்டு நேற்று (16.10.2022) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதல் வழிபாடு நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, திருக்கோயில் வளாகத்தில் சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திரர், சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட பல்வேறு கிராம தெய்வங்கள் மேள தாளங்கள் முழங்க தலையில் சுமந்தபடி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் பக்தர் வேண்டுதலின் பொருட்டு தலையில் தேங்காய் உடைக்கும் இடத்தில் கிராம தெய்வங்கள் அனைவரும் அமர்த்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதன் பின்னர் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து கிராம தேவதைகளுக்கு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்லம், பெங்களூரு, சர்ஜாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.