திருவாதிரையில் தாலி நோன்பு!

திருவாதிரையில் தாலி நோன்பு!

சிவபெருமானின் ரூபங்களில் முக்கியமானது ஸ்ரீ நடராஜர் ரூபம் என்றே கூறலாம். ஸ்ரீ நடராஜப் பெருமான் நூற்றியெட்டு விதமான நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது நாற்பத்தெட்டு என்றும், ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது முப்பத்தாறு என்றும், தேவர்களுக்காக ஆடியது பன்னிரண்டு என்றும், ஸ்ரீ திருமாலுடன் ஆடியது ஒன்பது என்றும், முருகனுடன் ஆடியது மூன்று என்றும் அறியப்படுகிறது. ஸ்ரீ நடராஜர், சிதம்பரம் கனக சபையில் ஆடிய தாண்டவம் ஆனந்தத் தாண்டவம் ஆகும்.

பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும், அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்று என்பதற்கு காளஹஸ்தி என்றும், நிலம் என்பதற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும், இவற்றின் பெருமைகளைக் கூறும் வண்ணம் இந்தப் புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் சிதம்பரம்தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.

முக்கண்ணனாம் ஈசனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அவை, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்திலும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்திலும், ஆவணி மாதத்தில் சதுர்த்தசியிலும் (திதி), புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியிலும் (திதி), மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திலும், மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியிலும் (திதி) அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அச்சமயம் நடராஜரை வணங்கி வழிபடுவது மிகவும் விசேஷமானது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று முறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்த அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டுக்கும்தான், ‘திரு’ என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில், ‘ஆருத்ரா’ என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்துக்குக் காரணமான புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம்.

பஞ்ச பூதங்களின் இயக்கத்துக்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன் பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினர்.

இதைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித் தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றை வரவழைத்து, அனைத்தையும் சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே, ‘ஆருத்ரா தரிசனம்’ என்று கூறப்படுகிறது. இன்றைய நாளில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம், ‘ஆருத்ரா அபிஷேகம்’ என அழைக்கப்படுகிறது.

ந்த 2023ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் ஆருத்ர தரிசன சிறப்பு நாட்களாக அமைந்திருக்கின்றன. முதலில் ஜனவரி 6ம் தேதி என்றும் இரண்டாவதாக டிசம்பர் 27ஆம் தேதி அன்றும் இந்நாட்கள் கொண்டாடப்படவிருக்கின்றன. ஜனவரி மாதம், 5ஆம் தேதி இரவு 9.26க்கு திருவாதிரை நட்சத்திரம் பிறந்து, ஏழாம் தேதி மதியம் 12 மணி வரை அமைந்திருக்கிறது. இதில் ஆறாம் தேதி முழுமையாக பௌர்ணமியும் சேர்ந்து இருப்பதால் அன்று ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது.

சில குடும்பங்களில் ஆருத்ரா தரிசனம் அன்று தாலி நோன்பு மேற்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. அப்படி இந்த நோன்பை மேற்கொள்ளுபவர்கள் ஆறாம் தேதி, விடியற்காலை பூஜை அறையைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி செம்மண் கோலமிட்டு, தீபாவளியன்று செய்வது போல் எண்ணெய், சீயக்காய், மஞ்சள் பொடி ஆகியவற்றை சுவாமியின் முன் வைத்து, அன்று எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். வீட்டில் பெரியவர்களைக் கொண்டு எண்ணை வைக்கச் சொல்ல வேண்டும்.

சுவாமி படங்களுக்கு, முக்கியமாக ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜர் படங்களுக்கு சந்தன, குங்குமம் இட்டு, பூச்சரங்கள் சாற்றி, திருமாங்கல்யச் சரட்டினை, வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் சுவாமி முன்பு வைத்துவிட்டு அன்றைய தினம் திருவாதிரைக்கு செய்த களி கூட்டை வைத்து நைவேத்தியம் செய்து, காலை 9 மணிக்குள் கட்டிக் கொள்ளலாம். கணவர் அருகில் இருந்தால் அவரை விட்டே சரட்டினை கட்டிவிடச் சொல்லலாம். கணவர் வீட்டில் இல்லாமல் வெளியூரிலோ வெளிநாட்டிலோ இருந்தால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை விட்டு கட்டி விடச் சொல்லலாம். அன்றைய பகல் பொழுது முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், உடல் நலம் குன்றியவர்கள், பழம், பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலை விளக்கேற்றியவுடன் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு படைத்த களி கூட்டை பிரசாதமாகச் சாப்பிடலாம்.

வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை வைத்துக் கொடுப்பது போல், தாலி நோன்பு மேற்கொள்பவர்கள், அன்றைய தினம் சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்குடன், மங்கலப் பொருட்கள், ரவிக்கைத்துண்டு, நாணயம் ஆகியவற்றை வைத்துக் கொடுப்பது மிகவும் விசேஷம். இதனால் கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும்.

இந்தத் தாலி நோன்பை சிரத்தையுடன், சுமங்கலிகள் மேற்கொண்டு, ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமானின் அருளைப் பரிபூர்ணமாகப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com