இறைவனுக்கு ஏன் மலர் அர்ச்சனை?

இறைவனுக்கு ஏன் மலர் அர்ச்சனை?

திருக்கோயில் கருவறையில் அருளும் இறைவனை வழிபட அர்ச்சனைக்காக நாம் அளிக்கும் மலர்கள், வாழ்க்கையில் நமது உடல் தேடிக்கொண்ட உணர்வுகளாகிய வாசத்தைக் குறிப்பவையாக உள்ளன. அதனாலேயே இறைவனை அர்ச்சிக்க வாசனையுள்ள மலர்களை நாம் பயன்படுத்துகிறோம்.

இறைவனை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதிலும் ஒரு முறை இருக்கிறது. முதலில் கடவுளுக்கு பூஜை செய்பவர் தமது வலது கரத்தின் ஐந்து விரல்களால் மலர்களை எடுப்பர். பின்னர் தமது கையை உயர்த்தி, மெதுவாக இறைவன் விக்ரகத்தின் பாதங்களில் அந்த மலர்களைப் போடுவர். இப்படியாக அனைத்து மலர்களும் தீரும் பக்தியோடு அதை அர்ச்சனையாகப் அர்ப்பணிப்பர்.

கடவுளின் திருப்பாதங்கள் நமக்கு மிக உயர்ந்த உண்மையை அடையாளம் காட்டுபவையாகத் திகழ்கின்றன. பொதுவாக, பாதங்கள் என்ற அடிப்படையைக் கொண்டே ஒரு உருவம் எழுந்து நிற்கிறது. அதுவே நம்முடைய தோற்றத்திற்கும் அடிப்படை. பாதம் உறுதியாக இருந்தால்தான் அதன் தோற்றமும் கம்பீரமாக இருக்கும். ஆகவே, மலர்களை இறைவனின் திருப்பாதங்களில் இடும்போது, உங்களுடைய உடலைப் பற்றிய உணர்வுகளாகிய வாசனைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, பேருண்மையை நாடிப் போகிறீர்கள் என்பது பொருள்.

ஐந்து விரல்களைக் குவித்துக் கீழே சாய்த்து மலர்களை எடுக்கிறோம். ஐந்து விரல்கள் அப்படிக் குவிந்து நிற்பது நமது ஐம்புலன்களைக் காட்டுகிறது. மனிதனின் ஐம்புலன்களும் உலகப் பற்றைப் பற்றிக்கொள்ள விரும்பும்போது ஐம்புலன்களுடன் தொடர்புள்ள வாசனைகளும் உருவாகின்றன. ஆனால், அவை எதுவும் தமக்கல்ல, அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என நினைக்கும்போது, அர்ச்சனைக்காக ஒருவரின் ஐந்து விரல்கள் நீள்வதைப் போல், அவரது ஐந்து புலன்களும் உயர்வு அடைகின்றன.

வாசமுள்ள மலர்களை இறைவனின் திருப்பாதங்களில் போடும்போது, இந்த உணர்வுகள் அழிந்து மறைந்து போகின்றன. மலர்கள் தீரும் வரை பூஜையில் அவற்றை இடுவது போல, இந்த ஐம்புலன்களின் உணர்வுகளும் அழியும் வரை தெய்வ சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். பிறகு அந்த இறை உணர்வுடனேயே ஐக்கியமாகி விடுகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com