தோஷம் போக்கி, செல்வம் கொழிக்கும் கஜலட்சுமி தாயார் வழிபாடு!

தோஷம் போக்கி, செல்வம் கொழிக்கும் கஜலட்சுமி தாயார் வழிபாடு!

ஷ்ட லட்சுமிகளுள் ஒருவள் கஜலட்சுமி. இவள் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது தோன்றியவள். அவ்வாறு தோன்றும்போது இவளது இருபுறம் யானைகள் வந்து இவளுக்க அபிஷேகம் செய்தன. இதனால் இவளை கஜலட்சுமி என்கின்றனர். ‘கஜ’ என்றால் யானை எனப் பொருள். தமிழில் இவளை, ‘வேழத்திரு’ என்று அழைக்கின்றனர். கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள். இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள். பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இரு யானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.

ஆவணி மாத வளர்பிறையில் தசமி திதி அன்று கஜலட்சுமி விரதம் இருந்து வழிபட்டால் இம்மூன்று செல்வங்களும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். புதன்கிழமையன்று கஜலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நம்முடைய ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் நாம் மனதார அன்னை கஜலட்சுமியை வேண்டிக்கொண்டால் தோஷங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.

அன்னை மகாலட்சுமி செல்வத்துக்கு அதிபதி. லட்சுமி பூஜையை தீபாவளி நாளிலும் அட்சய திருதியை நாளிலும் செய்வது வழக்கம். கஜலட்சுமி பூஜையை ஆவணி மாதம் வளர்பிறை தசமி நாளில் செய்வது சிறப்பானது. நிலம், வீடு, தோட்டம் போன்ற அசையாத சொத்துக்களை கொடுக்கும் கஜ லட்சுமி தாயாரை பெண்கள் ஆவணி தசமி திதி நாளன்று பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

கஜலக்ஷ்மி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு எத்தகைய தீய எண்ணங்களும் ஒழிந்து கருணையே வடிவமாகத் திகழும் ஞானம் பிறக்கும். தனக்குத்தான் எல்லாம் என்கிற சுயநல எண்ணத்தை விடுத்து, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் தானம் என்கிற சிறந்த புண்ணியத்தைப் பெற்றுக்கொள்ள கஜலட்சுமி தாயாரை வழிபடுவது சிறப்பு.

கஜலட்சுமி தாயார் அஷ்ட லட்சுமிகளுக்கும் நடுநாயகமாக நின்று காட்சி தருபவளாக இருக்கின்றார். தன்னுடைய நாற்கரங்களில் இரு கரங்களில் தாமரை மலர்களையும், மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரையையும் காட்டி நமக்கு அருளினை கொடுப்பவராக இருக்கின்றார். கஜலட்சுமி என்கிற இந்த ஆதிலட்சுமி ஒவ்வொருவருடைய வீட்டின் நிலைப்படிக்கும் மேல் அமர்ந்து உள்ளதாக ஐதீகம். பத்மாசன நிலையில் அமர்ந்து இருபுறமும் தேவ யானைகள் அபிஷேகம் செய்வது போல இருக்கும் இந்த கஜலட்சுமியை வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய இந்த மூன்றும் ஒருவர் இடத்தில் இருந்து விட்டால் அவரை ஒருவராலும் அசைக்க முடியாது. இந்த மூன்றையும் கொடுப்பவள்தான் கஜலக்ஷ்மி. கஜலட்சுமி, ராஜலட்சுமி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றாள். ஆவணி மாத வளர்பிறை தசமி நாளில் தேவலோக யானைகள் அனைத்தும் ஒன்று கூடி இன்னாளில் கஜலட்சுமி தாயாரை வணங்கி நீராடி வழிபட்டதாகப் புராணங்கள் குறிப்பிடுகிறது. பத்மாசன நிலையில் அமர்ந்து இருபுறமும் தேவ யானைகள் அபிஷேகம் செய்வது போல இருக்கும் இந்த கஜலட்சுமியை தனலட்சுமி, சாந்தலட்சுமி என்றும் அழைப்பது உண்டு.

காமாட்சி அம்மன் விளக்கில் இருப்பதும் கஜலட்சுமி தாயார்தான். இருபுறமும் யானைகள் விசிறி விடுவது போல இருக்கும் இந்த கஜலட்சுமி தாயாரை ஆவணி வளர்பிறை தசமி திதியன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து வழிபட்டால் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும். விரதம் இருக்கும் நாளில் அதிகாலையில் நீராடி, பூஜை அறையில் மரப்பலகை ஒன்றில் சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணி விரித்து அதில் பச்சரிசி பரப்பி தாமரை கோலம் போட்டு, அதன் மீது அஷ்ட லக்ஷ்மி படம் அல்லது கஜலட்சுமி படத்தை வைத்து அவளுக்கு தாமரை மலர் சூட்டி கஜலட்சுமி விளக்கை வைத்து அதில் நெய் தீபமிட்டு தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து மூல மந்திரங்களை உச்சரித்து முறையாக உங்கள் தேவைகளை வேண்டி வணங்கிக் கேட்டுக் கொண்டால் வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களையும், செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகிய வரங்களையும் வாரி வழங்குவாள். ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம்,
ஸ்ரீ சூக்தம் ஆகிய ஸ்தோத்திரங்களை பாடுவது சிறப்பு. அஷ்ட லக்ஷ்மி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வது போன்றவற்றை இந்நாளில் செய்வதால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.

'ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மி சௌபாக்ய தாரண்யை நம' என்று 108 முறை மகாலட்சுமியை அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இந்த பூஜை செய்து வர, நம்முடைய கர்ம வினைகள் நீங்கி, செல்வ வளம் பெருகும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அனைத்து இந்து சமயக் கோயில்களிலும் கஜலட்சுமியை சன்னிதியின் வாயிலில் புடைப்புச் சிற்பமாக வைத்துள்ளார்கள். அரண்மனைகள், வீடுகளின் நிலகால்கள் போன்றவற்றில் கூட கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com