
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழங்கும் பிரசாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பன்னீர் இலைகளில் வைத்து வழங்கப்படும் இலை விபூதி பிரசாதமாகும்.
இப் பிரசாதம் வழங்கப்படுவதற்கான காரணம் என்னவென்றால் முருகன் கோயிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்றபோது ஒருநாள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு அன்றைய தினம் வழங்க வேண்டிய வேலைக்கான ஊதியம் வழங்க பணம் இல்லை. கோயில் திருப்பணியில் ஈடுபட்ட சாதுக்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர். மேலும் வேலை முடிந்ததும் பணியாளர் களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லையே என முருகனிடம் முறையிட்ட நிலையிலையே அயர்ந்து தூங்கிவிட்டனர். தூக்கத்தில் அவர்கள் கனவில் முருகப்பெருமான் தோன்றி வேலை செய்யும் நபர்களுக்கு வேலை முடிந்து ஊதியம் வழங்கும்போது பணத்துக்கு பதிலாக பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குமாறு கூறினார். அதேபோல் அன்றைய தினம் கூலிக்கு பதில் இலை விபூதி கொடுத்தனர். அதைப் பெற்றுச் சென்ற பணியாளர்கள் தங்கள் வீடுகளில் சென்று இலை விபூதியை பிரித்துப் பார்த்தபோது அவரவர் வேலைக்கு ஏற்ற ஊதியம் இருந்தது. அதனால் தான் இன்றும் இங்கு இலை விபூதி பிரசாதமாக வழங்கப் படுகிறது. பன்னீர் மரத்தில் இருந்து பெறப்படும் இந்த இலையில் முருகப்பெருமானின் பன்னிரு கைகளை போல் பன்னிரண்டு நரம்புகள் உள்ளன. மேலும் இந்த விபூதி பிரசாதத்தை இலையோடு அப்படியே சாப்பிடலாம்.
காசநோயால் பாதிக்கப்பட்ட ஆதிசங்கரர் இலை விபூதியை உட்கொண்டு அந்நோயிலிருந்து விடுபட்டார். இதேபோல் காச நோயால் பாதிக்கப்பட்ட விசுவாமித்திரருக்கு முருகப்பெருமானை இலை விபூதியை வழங்கியதாகவும் ஐதீகம் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டியில் விரதம் இருக்கும்போது இலை விபூதியை உண்பதால் குழந்தை பாக்கியம் பெறுகின்றதாகவும் நம்பிக்கை உள்ளது.
பன்னீர் மரத்தின் இலைகளை பறித்து அதனுள் விபூதியை வைத்து கட்டுகளாக கட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டு பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. விபூதிக்காக பன்னீர் மரம் முன்னாளில் கோவில் அருகிலேயே வளர்க்கப்பட்டு வந்தது. தற்போது உடன்குடி அருகில் இருக்கும் காலன்குடியிருப்பு பகுதியில் வளர்க்கப்படுகிறது. திருச்செந்தூர் சிவன் கோயிலிலும் மரங்கள் உள்ளன.
இரவு 8:30 மணிக்கு நடைபெறும் ஏகாந்த பூஜையின்போது இலை விபூதி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.