பூசலார் நாயனாரின் மனக்கோயில் பற்றிய கதை உணர்த்துவது என்ன?

பூசலார் நாயனாரின் மனக்கோயில் பற்றிய கதை உணர்த்துவது என்ன?

மது எண்ணங்களை மனதில் நிலைநிறுத்தினால் நினைத்தது எத்தகு பெரும் காரியமானாலும் சாத்தியம் என்பதை உணர்த்தும் சிறுகதை இது.           

திருநின்றவூர் என்பது வேத அறிவுடைய ஒழுக்கமான மக்களைக் கொண்ட ஊர். அந்த ஊரின் அந்தணர் மரபில் பிறந்தவர் பூசலார். அவர் வேதங்களைக் கற்று அதன் அறிவினால் சிறந்து விளங்கினார். ஒழுக்கமான பக்தனாக வாழ்ந்த அவர், சிவபெருமான் மீது மிகுதியான பக்தி கொண்டார். சிவனடியார்களுக்கு தொண்டு செய்தல் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். பக்தர்களின் தேவைக்கு முடிந்தவரை சேவை செய்தார். தன்னை அடைந்தவனுக்கு  அடைக்கலம் தரும் வீடற்ற இறைவனுக்கு அழகிய ஆலயம் கட்ட விரும்பினார். அவர் தனது நிதித்திறனைப் பற்றி நினைக்கவே இல்லை. தேவையான பணத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் சேகரிக்க முயன்றார். ஆனால், போதுமான அளவு நிதி கிடைக்கவில்லை. மிகவும் ஏமாற்றமடைந்தார்.

ஏமாற்றம் இருந்தபோதிலும், இறைவனுக்கு ஒரு அற்புதமான ஆலயம்  கட்டும் பெரிய திட்டத்தை அவர் கைவிடவில்லை. அந்த புனிதப் பணிக்குத் தேவையான பணத்தை தன் மனதாலேயே ஒவ்வொரு இடமாகச் சென்று, சேகரித்து வைத்தார்.  அவரது மனதினாலே மிகவும் திறமையான கொத்தனார்கள் மற்றும் பிற தொழிலாளர்களை கட்டட வேலைக்கு அமர்த்தினார். புனிதமான தனது மனக்கோயிலின் அடித்தளத்தை அமைக்க ஆகமங்களின்படி மிகவும் பொருத்தமான ஒரு நாளைக் கண்டார். மேலும், பலிபீடத்தையும் ஆலயத்தின் அனைத்து உள் இடங்களையும் முடித்தார். ஒரு பெரிய கோபுரத்தை எழுப்பி, களிமண் வடிவங்களால் அலங்கரித்தார். தினமும் இறைவனின் புனித அபிஷே கத்திற்கு சேவை செய்யும் குளம் தோண்டப் பட்டது. ஆலயத்தைச் சுற்றிலும் பிரம்மாண்டமான வலுவான சுவர்கள் எழுப்பப்பட்டன.  அவரது தூய்மையான  அன்பின் முழுமையைப்போல ஆலயம் முழுமையடைந்தது. அற்புதமான ஆலயத்தை நிறுவுவதற்கும் புனிதப் படுத்துவதற்கும் அவர் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தார்.

இக்காலகட்டத்தில்  பல்லவ அரசர், கைலாசப் பெருமானுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தலைநகர் காஞ்சியில்  சிறந்த கட்டடக்கலைக் கொண்ட கோயிலைக் கட்டினார். கோயிலில் புனித ஸ்தாபனத்திற்கு ஏற்ற பண்டிதர்களுடன் கலந்தாலோசித்து தேதியை நிர்ணயம் செய்தார். இறைவன், மன்னன் கனவில் வந்து, “திருநின்றவூர்ப் பூசலார் நீண்ட நாள் முயற்சியால் செய்த ஆலயத்துள் நான் நாளை நுழைவேன்” என்று கூறி, “அதனால்  நீ வேறு நாளில் உன்னுடைய குடமுழுக்கை நடத்து” என்று அரசனிடம் கூறினார்.

யார் இந்த பூசலார்? அந்த ஆலயத்துக்குள் பிரவேசிக்க இறைவனே காத்துக்கொண்டிருக்கிறானே? என்று எண்ணி, விரும்பிச் சேவை செய்த அந்த பக்தரைப்  பார்த்து வணக்கம் செலுத்த விரும்பினார் மன்னர். அரசர் திருநின்றவூருக்குச் சென்று அங்குள்ள பூசலார் கட்டிய கோயிலைப் பற்றி விசாரித்தார். ஆனால், அந்த ஊரில் அப்படி எந்த பக்தரும் கட்டிய கோயில் இல்லை என்ற பதிலே கிடைத்தது. அரசன் அந்த ஊரின் வேத அந்தணர்களை  அழைத்தான். அவர் அவர்களிடம் பூசலாரைப் பற்றிக் கேட்டபோது, ​​அந்த ஊரில் பூசலார் என்ற சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள்.

அரசன் பூசாலாரிடம் தானே சென்று, “இறைவனுக்கு தாங்கள் கட்டிய உயர்ந்த கோயில் எங்கே?” என்று கூப்பிய கரங்களுடன் கேட்டான். அவர் இறைவனுக்கு தான் ஒரு அற்புதமான ஆலயம்  கட்ட விரும்பிய விதத்தையும், அதனால் ஏற்பட்ட நிதிப் பிரச்னைகளையும் அரசருக்கு விளக்கினார். அதனால், தன் மனத்தினால் கற்பனையில் கட்டிய ஆலயம் அது என்றும் கூறினார். மனதையே வசிப்பிடமாகக் கொண்ட இறைவனுக்குக் கட்டிய பிரம்மாண்டமான ஆலயத்தில் இறைவனை நிறுவி முடித்தார் அந்த மகா பக்தர். பக்தியின் உறுதியும் முழுமையும் அதன் காரணமாகப் பொருள் இடையூறுகள் இருந்தபோதிலும், பூசலார் நாயனார் தனது சேவையில் வெற்றி பெற்றதால், இறைவனே அவர் மனக்கோயிலில் குடிபுகுந்தார். பூசலாறும் இறைவனோடு ஒன்றானார். இவரின் வாழ்வு எண்ணங்களின் ஆற்றலுக்கான உதாரணம் ஆகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com