
நவராத்திரி பண்டிகையின் எட்டாம் திருநாள் இன்று. அஷ்டமி தினமான இந்நாளை, ‘மஹாஷ்டமி’ என்று குறிப்பிடுவர். இன்று அன்னை துர்கையை மஹாகௌரி கோலத்தில் வழிபடுவது வழக்கம். ‘மஹா’ என்றால் பெரிய என்று பொருள்படும். அனைத்து சக்திக்கும் மேலான துர்கையாக இவள் போற்றப்படுகிறாள்.
முன்பொரு சமயம் அன்னை பார்வதி தேவி, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தாள். தவத்தில் லயித்திருந்த அன்னையின் உடலை மண் போர்த்தி கருமையானது. அம்பிகையின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், தேவிக்குக் காட்சி தந்து அவரை தாம் மணம் புரிவதாக உறுதி தந்தார். அதற்கு முன் அவர் பார்வதி தேவியை கங்கை நீரால் நீராடச் செய்தார். அதற்குப் பின் தேவியின் உடல் பால் போல் வெண்மை நிறமானது. இந்த தேவியே மஹாகௌரி எனப் போற்றப்பட்டாள்.
இந்த துர்கை நான்கு திருக்கரம் கொண்டு, மேலிரு கரங்கள் சூலத்தையும் உடுக்கையையும் தாங்க, கீழ் இரு கரம் அபய ஹஸ்தமாகத் திகழ்கிறது. வெண்மை நிற காளையை வாகனமாகக் கொண்ட இந்த அம்பிகையை இன்று வழிபட்டால் துன்பத்தில் உழலும் ஒருவரின் வாழ்க்கை வசந்தமாகும். பக்தர்கள் வேண்டும் பிரார்த்தனைகள் அனைத்தையும் இந்த துர்கை நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.
நமது உடல் சக்கரங்களில் இவள், 'ஸ்வாதிஷ்டானமாய்' திகழ்கிறாள். ஞானிகளும் யோகிகளும் இந்த துர்கையின் அருளாலேயே தாம் வேண்டுவதை ஸித்திப்பர். இந்த அம்பிகையின் ஆபரணங்களும் கூட வெண்மை நிறத்திலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துர்கையின் தியான மந்திரம்:
‘ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின்
மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா’
‘வெள்ளை நிறக் காளையை வாகனமாகக் கொண்டவளும் தூய்மையான வெண்ணிற ஆடையை அணிந்தவளும் தூய்மையானவளும் மஹாதேவனின் நாயகியாம் அன்னை கௌரி தேவியே, அனைத்து நலன்களையும் எனக்கு அருள வேண்டுகிறேன்’ என்பது இதன் பொருளாகும். மஹாஷ்டமி தினமான இன்று இந்த தேவியை வழிபட்டு அருள் பெறுவோம்.