சதுர்முக சண்டிகேசுவரர்!

சண்டீச பதம் தரும் ஈசன்
சண்டீச பதம் தரும் ஈசன்
Published on

- எம்.வசந்தா

சிவாலயம் தோறும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நீர் விழுகின்ற கோமுகத்தின் அருகே தெற்கு நோக்கியவராக அமர்ந்த கோலத்தில் தியானத்திலிருப்பவர் சண்டிகேசுவரர். இவரை வணங்கினால்தான் ஆலய தரிசனம் பூர்த்தி அடையும் என்றும், தரிசன பலன் கைகூடும் என்றும் பெரியவர்கள் சொல்லியுள்ளனர். பொதுவாக, ஒரே ஒரு முகத்துடன் காட்சி தரும் இவரை, நான்கு முகத்தினராக சில தலங்களில் பூஜிக்கிறோம். இப்படிப்பட்ட கோலத்தை சதுர்முக சண்டிகேசுவரர் என்கிறார்கள்.

சண்டிகேசுவரப் பெருமான் கிருத யுகத்தில் நான்கு முகங்களுடன் திகழ்ந்திருக்கிறார். அடுத்து திரேதா யுகத்தில் மும்முகத்தினராகவும், துவாபர யுகத்தில் இரு முகங்களுடனும் தரிசனம் அளித்திருக்கிறார். தற்போது கலி யுகத்தில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். நான்கு முகத்துடன் காட்சி தரும் இந்த மூர்த்தி வடிவம் மிகவும் தொன்மையானது. இவரை வழிபட்டால் மனோ திடம் கூடும். அசாத்திய நம்பிக்கையும் மன ஒருமைப்பாடும் வசப்படும். தவிர, நான்கு தலைமுறை பாவங்களில் இருந்தும் விடுபடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

நான்கு முக சண்டிகேஸ்வரர்
நான்கு முக சண்டிகேஸ்வரர்

மிகச் சில ஆலயங்களில் மட்டுமே இந்த சதுர்முக சண்டிகேசுவரப் பெருமானை தரிசனம் செய்ய முடியும். நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் வில்லியநல்லூரில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி சமேத காளீஸ்வரர் ஆலயத்தில் இந்தப் பெருமானை தரிசிக்கலாம். அதேபோல், ஸ்ரீ லலிதாம்பிகை கோயில் கொண்டுள்ள திருமீயச்சூரிலும் இந்தக் கோலத்தில் தரிசிக்கலாம். இது திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே அமைந்துள்ளது.

தாம் செய்த சிவ பூஜைக்கு தந்தை இடையூறு விளைவித்தபோது இவர் எறிந்த அம்பு கோடாரியாக மாறி தந்தையின் காலைத் துண்டித்தது. அந்த ஆழ்ந்த பக்தியால் ஈர்க்கப்பட்ட பரமன் அவருக்கு சண்டீசப் பதம் தந்தார் என்கிறது பெரிய புராணம். அதுமட்டுமல்ல, பூஜையில் இருப்பவரை தடுப்பதும், அதற்கு இடையூறு விளைவிப்பதும் ஆபத்தானது என்பது இங்கே சூட்சுமமாக உணர்த்தப்படுகிறது. தவிர, சிவ தியானத்தை விட மேலானது எதுவுமில்லை என்று உணர்த்துபவராகவே சிவாலயந்தோறும் இடங்கொண்டிருக்கிறார் சண்டிகேசுவரப் பெருமான். அவர் முன் நின்று கை தட்டுவதும் நூலைப் பிரித்துப் போடுவதும் மிகவும் தவறானதாகும். அதே சமயம் அவர் உணர்த்துகின்ற சிவ தியானத்தை உணராமற்போவது அதை விடவும் தவறானதாகும்.

‘ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்’

என்பது சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீ சண்டிகேசுவரரின் காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை சொல்வது நல்லது. பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும்போது சண்டிகேசுவரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com