எள்
எள்

கடன் கொடுக்கவும்; பெறவும் கூடாத பொருள்!

ருவர், மற்றவர்க்கு பணத்தையோ பொருளையோ கடனாகக் கொடுத்து திரும்பப் பெறலாம். ஆனால், கடனாகக் கொடுக்கவோ, பெறவோ கூடாத ஒரு பொருள் இருக்கிறதென்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது! பகவான் மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் எள், ஒருவர் செய்யும் அத்தனைப் பாபங்களையும் போக்கும் தன்மை கொண்டது. பொதுவாக, இது செடிகளில் காய்க்கும்போது கருப்புத் தோலுடன் கூடியதாக இருக்கும். அதன் சுய நிறமான கருப்பு நிறத்துடனோ அல்லது அதன் தோலை உரித்து வெண்மை நிறமாக்கியும் இது பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு எள் மறைந்த முன்னோர் வழிபாட்டுக்கும், வெள்ளை எள் தெய்வ வழிபாட்டுக்கும் பயன்படுகிறது. அமாவாசை போன்ற நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போதும், ஒவ்வொரு வருடமும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும் கருப்பு எள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு எள் இல்லாமல் பித்ரு வழிபாடே இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

செடிகள்
செடிகள்

அதைப் போலவே, தோல் உரிக்கப்பட்ட வெள்ளை எள் சிவன், விஷ்ணு, அம்மன் என அனைத்துத் தெய்வ வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் அனைவராலும் செய்யப்படும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்தப்படும்
அஷ்ட திரவியம் எனப்படும் எட்டு விதமான ஹோமப் பொருட்களுள், ‘ஸ்வேத திலம்’ எனப்படும் வெள்ளை எள்ளும் ஒன்று. அதேபோல், அம்மனுக்குச் செய்யப்படும்
சண்டீ ஹோமம் மற்றும் மகாவிஷ்ணுவுக்குச் செய்யப்படும் சுதர்சன ஹோமங்களிலும் வெள்ளை எள்தான் முக்கியமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, தெய்வ வழிபாடுகள் சுப காரியம் என்றும், முன்னோர் வழிபாடுகள் அசுப காரியம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இந்த இரண்டுமே மங்கலகரமான வழிபாடுகள்தான். இவை இரண்டாலுமே நமக்குக் கிடைப்பது நன்மைதான்.

கருப்பு எள்ளோ அல்லது வெள்ளை எள்ளோ, இவை இரண்டுக்குமே எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால், ஒருவரிடமிருந்து எள்ளை தானமாகப் பெற்றுக் கொள்வதையோ அல்லது கொடுப்பதையோ சாஸ்திரம் தவறென்று சொல்லவில்லை. ஆனால், ஒருவரிடமிருந்து எள்ளை கடனாக வாங்கவும் கூடாது, தரவும் கூடாது என்று சொல்கிறது சாஸ்திரம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com