பாணம் இல்லாத ஜோதிர்லிங்க சிவாலயம்!

மூலவ்ர்
மூலவ்ர்
Published on

ன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மஹாராஷ்ட்ரா மாநிலம், திரிகம்பேஸ்வரர் சிவாலயமும் ஒன்றாகும். கோதாவரி நதி உற்பத்தியாகும் பிரம்மகிரி என்னும் மலைக்கு அருகில் இந்தப் புனிதத் தலம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தை பிரம்மகிரி, நீலகிரி மற்றும் காலகிரி ஆகிய மலைகள் சூழ்ந்திருக்கின்றன.1740 முதல் 1760 வரை ஆண்ட மூன்றாம் பேஷ்வா பாலாஜி பாஜிராவ் என்ற மன்னரால் தற்போதைய இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இப்போது திரிகம்பேஸ்வரர் ஆலய அறக்கட்டளை மூலம் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. ஆலயத்தின் அருகிலேயே அமிர்தவர்ஷினி என்ற புனிதத் தீர்த்தம் அமைந்துள்ளது. இது தவிர, பில்வ தீர்த்தம், விஸ்வனாத தீர்த்தம் மற்றும் முகுந்த தீர்த்தம் எனும் மூன்று நீர்நிலைகளும் கோயில்அருகிலேயே அமைந்துள்ளன.

கடல் மட்டத்துக்கு மேல் 2,500 அடி உயரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில் கருவறைக்கு மேல் அமைந்திருக்கும் விமானத்தின் அமைப்பு வாழைப்பூ வடிவில் காட்சி தருகிறது.
அந்த அமைப்பின் மேல் தங்கத்தினாலான கலசம் மற்றும் சிவனின் சூலம் ஆகியன அமைந்துள்ளன. மூலவர் திரிகம்பேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே இருக்க, லிங்கம் இருக்க வேண்டிய இடம் பள்ளமாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பள்ளத்தில்தான் மும்மூர்த்திகளைக் குறிக்கும் லிங்கங்கள் சிறிய வடிவில் காட்சியளிக்கின்றன. இது தவிர, கருவறையில் மூன்று லிங்கங்கள் உள்ளன. அவை முறையே சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரைக் குறிக்கின்றன. ஆலயத்தின் உள்ளே கங்கா தேவி, ஜலேஸ்வரர், ராமேஸ்வரர், கௌதமேஸ்வரர், கேதார்நாத், ராமர், கிருஷ்ணர், பரசுராமர் மற்றும் லக்ஷ்மி நாராயணர் ஆகியோரது திருவுருவங்களும் உள்ளன.

கோயில் வெளித்தோற்றம்
கோயில் வெளித்தோற்றம்

ந்தக் கோயிலின் புராண வரலாறு திருவண்ணாமலை திருத்தலத்தின் வரலாற்றைப் போலவே சொல்லப்படுவது விசேஷம். ஒரு முறை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிணக்கு ஏற்பட்டதாம். அவர்களைச் சோதிக்க, சிவன் மூவுலகங்களையும் பிளந்து அடி, முடி காண முடியாத ஒரு ஜோதிப் பிழம்பாக காட்சி தந்தாராம். அதுவே ஜோதிர்லிங்கம் எனப்பட்டது. அந்த ஒளியின் அடிவாரத்தையும் உச்சியையும் தேடி முறையே விஷ்ணுவும் பிரம்மாவும் பயணம் மேற்கொண்டார்களாம். பிரம்மா தான் சிவனின் முடியைக் கண்டதாகப் பொய் கூற, விஷ்ணுவோ தமது தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஒளி வடிவமாகத் தோன்றிய சிவன், பிரம்மாவுக்கு இனி விழாக்களில் இடமிருக்காது என சாபம் அளித்து, விஷ்ணு என்றென்றும் வழிபடப்படுவார் என வரமளித்து இருக்கிறார் என இத்தல புராணம் கூறுகிறது. ஆன்மிகத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் கண்களுக்கு, சிவன் இத்தலத்தில் ஜோதி வடிவாய் தரிசனம் தருவார் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. தினசரி ஆவுடையார் குழியின் மேல் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டுப் பூஜைகள் நடைபெறுகின்றன. சிறப்பு நாட்களில் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. லிங்க மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் கிரீடம் வைரம், மரகதம் போன்ற விலை மதிப்புமிக்க கற்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த கிரீடம் சிவனுக்கு அணிவிக்கப்படுகிறது.

கோயில் நுழைவாயில்
கோயில் நுழைவாயில்

நாகாரா கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் பரந்த முற்றத்தில் ஷிகாரா என்ற மேடையில் தாமரையின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரஹத்தின் முன் உள்ள மண்டபத்துக்கு மூன்று நுழைவாயில்கள் உள்ளன. கோயில் தூண்களில் பூக்கள், கடவுளர்களின் திருவுருவங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கண்ணாடி ஒன்றின் வழியாக மூலவரின் பிம்பத்தைப் பக்தர்கள் தரிசிக்கும்படியான அமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.

கும்பமேளா, மஹா சிவராத்திரி, காத்திகைப் பௌர்ணமி போன்ற சமயங்களில் பக்தர்கள் ஏராளமாக இங்கே கூடுகின்றனர். அக்டோபரில் இருந்து மார்ச் வரையான காலம் இந்த ஆலயத்தை தரிசிக்க உகந்த மாதங்களாகும். பத்து மணிக்கு முன்பாகவே ஆலயத்தை அடைந்துவிடுகிறார்கள். காரணம், அதன் பிறகு கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிடும் என்பதால். ஒவ்வொரு வாரமும் திங்களனறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை உத்ஸவர் ஊர்வலம் நடைபெறும். சமீபத்தில்தான் கருவறையில் பெண்களும் நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அமைவிடம்: நாசிக் நகரிலிருந்து சுமார் 28 கி.மீ., தானேவிலிருந்து 157 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்திருக்கிறது. மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள் பலவும் நாசிக்கிலிருந்து கோயில் வரை இயக்கப்படுகின்றன.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com