
கோயில் இறை வழிபாட்டில் ஒவ்வொரு செயலுக்கும் அறிவியல் ரீதியிலான காரணங்கள் உள்ளன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நாம் கோயிலில் வழிபாட்டின் போது அடிக்கும் மணி.
கோயில் மணிகள் சாதாரண உலோகத்தினால் செய்யப்படுவதல்ல. கேட்மியம் (தகர உலோக வகை), ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், க்ரோமியும் மற்றும் மாங்கனீசு போன்ற பல உலோகத்தின் கலவையால்தான் கோயிலில் ஒலி எழுப்பும் மணி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு முறை மணி அடிக்கப்படும்போதும், ஒவ்வொரு உலோகத்தில் இருந்து தனித்துவமான ஒலி ஏற்படும் வகையில் ஒவ்வொரு உலோகமும் கலக்கப்பட்டிருக்கும்.
இந்த தனித்துவமான ஒலிகளால், நம் இடது மற்றும் வலது மூளையில் ஒற்றுமை உண்டாக்கும். அதனால் மணி ஒலிக்கத் தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய சத்தம் எழும்.
இந்த சத்தம் ஏழு நொடிகள் வரை நீடிக்கும். மணியோசையில் இருந்து வரும் எதிரொலி, நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தொடும். அதனால், மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வுத் திறனும் தீவிரமடையும். அதனால்தான் கருவறைக்குச் செல்லும் முன் மணியை அடித்துவிட்டுச் செல்கிறோம்!
சௌமியா சுப்ரமணியன், சென்னை
சரஸ்வதி தேவி சிவனருள் பெறவும் அளப்பரிய ஞானம் பெறவும் பல திருத்தலங்களில் சிவனை பூஜித்துள்ளதாக ஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
பிரம்மனும் சரஸ்வதியுமாக சீர்காழியில் சிவபெருமானை வழிபட்டு ஈசன் அருள் பெற்றதாக திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். அதைப்போல், திருமறைக்காடு எனும் தலத்திலும் சரஸ்வதி தேவி சிவனை வழிபட்டதாக ஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
வாணி தேவி சந்தியா தேவதையாக காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் திருவீழிமிழலை எனும் தலத்தில் சிவனை வழிபட்டு பேறு பெற்றதால் அங்குள்ள மூன்று லிங்கப் பெருமான்கள் காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றனர்.
பெருவேளூர் எனும் திருத்தலத்தில் சிவபெருமானை வாணியாகவும், சரஸ்வதியாகவும் பூஜித்து கலைமகள் வழிபட்டதால் இங்குள்ள சிவலிங்கம் வாணி சரஸ்வதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
சரஸ்வதி தேவி வழிபட்ட சிவாலயங்களில் முக்கியமானது காளஹஸ்தியாகும். இங்குள்ள தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடியே சரஸ்வதி தேவி சிவனை பூஜித்து வழிபட்டாள்.
சங்கரி வெங்கட், புதுபெருங்களத்தூர்
*******************************
சரஸ்வதி தேவிதான் உலகின் முதல் பெண் தெய்வம் என வேதங்கள் கூறுகின்றன. இதனால் சரஸ்வதி தேவிக்கு, ‘ஆதிகாரணி’ என்று பெயர். ஆத்மவித்யா, மஹாவித்யா, ஸ்ரீவித்யா காமஸேவிதா, ஸ்ரீஷோடசாஷரி வித்யா, தசமுத்ரா ஸமாராத்யா, திரிபுரா, ஸ்ரீவசங்கரி, ஸ்ரீ ஞானமுத்ரா, ஞானகம்யா, ஞானஜ்ஹோய ஸ்வரூபிணி என சரஸ்வதி தேவியைப் போற்றுகிறது லலிதா சகஸ்ரநாமம்.
சரஸ்வதி தேவிக்கு வாரக்கிழமைகளில் படைக்க வேண்டிய நிவேதனங்கள்:
ஞாயிறு – சர்க்கரைப் பொங்கல், திங்கள் – பால் சாதம், செவ்வாய்– வெண் பொங்கல், புதன் – கதம்ப சாதம், வியாழன் – எலுமிச்ச பழ சாதம், வெள்ளி – பால் பாயசம், சனி – புளியோதரை.
பிள்ளைகள் பிறந்த கிழமையில் இந்த நிவேதனங்களைப் படைத்து சரஸ்வதி தேவியை மனமார வேண்டிக்கொள்ள, அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் நன்கு கல்வி கற்று மேன்மை அடைவர்.
ஜீவாத்மாக்கள் அனைத்தும் இறைவனை வணங்குகின்றன. ஆனால், மூலப்பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ண பகவான் கைகூப்பி வணங்கும் பக்தர்கள் யார் தெரியுமா?
நித்யான்ன தாதா - தினமும் அன்னதானம் செய்வோர், தருணாக்னிஹோத்ரி - தினமும் அக்னி ஹோத்ரம் செய்வோர், வேதாந்தவித் - வேதாந்தம் அறிந்தவர்கள், சந்திர சஹஸ்ர தர்சீ - சகஸ்ர சந்திர தரிசனம் செய்தவர், மாஸோபாவாசீச - மாதம் தோறும் உபவாசம் இருப்பவர், பதிவ்ரதா - பதிவிரதையான பெண்கள் ஆகிய ஆறு பேர்களை பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வணங்குகிறார்.
மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்