சூரிய கிரஹணமும் குருக்ஷேத்ரமும்!

சூரிய கிரஹணமும் குருக்ஷேத்ரமும்!
Published on

- எஸ்.ஸ்ருதி

ஸ்காந்த புராணத்தின்படி ஒவ்வொரு சூரிய கிரஹண புண்ய காலத்தின்போதும், குருக்ஷேத்ரத்தில் இந்தியாவின் அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களும் ஒன்று சேருவதாக ஐதீகம். இவ்வருடம் 25.10.2022 அன்று சூரிய கிரகணம் வருகிறது. ஹரியானா மாநிலம், டில்லி அம்பாலா ரெயில்வே பாதையில் அமைந்துள்ள குருக்ஷேத்ரம் காலங்காலமாக, ‘தர்ம க்ஷேத்ரம்’ எனப் புகழ் பெற்று விளங்குகிறது.

ஒருவர், ‘நான் ஒரு முறையாவது குருக்ஷேத்ரம் போவேன்… குருக்ஷேத்ரத்தில் வசிப்பேன்’ என்று சொல்வானேயானால், அவனது ஸர்வ பாபங்களும் நசிந்து விடும். குருக்ஷேத்ரத்தின் காற்றில் கலக்கும் தூசி கூட மனிதனுக்கு மோக்ஷத்தைத் தருகிறது. குருக்ஷேத்ரா ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 8.கி.மி. தொலைவில் ஸரஸ்வதி நதிக்கரையில், ‘ஸ்யோதிஸர்’ என்ற கிராமம் உள்ளது. இவ்விடத்தில்தான் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார்.

பாண்டவர். கௌரவர்களுக்கு மூதாதையர் ராஜகுரு ஆவார். அவர் பெயரிலிருந்துதான் குருக்ஷேத்ரம் என்ற பெயர் உண்டானது. பெரிய தபஸ்வியும், தர்மவானுமான இவரது தவத்தினாலும், தியாகத்தினாலும் இந்த பூமியை தர்ம பூமியாக ஆக்கினார். இவர் தம் கைகளால் நிலத்தை உழுததால் இந்த க்ஷேத்ரம் குருக்ஷேத்ரம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ஸரஸ்வதி – த்ருஷத்வதி எனும் இரு நதிகளுக்கு மத்தியிலுள்ளது.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கோர யுத்தம் நடந்ததும், ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனனை மையமாக வைத்து, உலக நன்மைக்காக கீதையை உபதேசித்ததும் இங்குதான். ராஜரிஷிகள், முனிவர்கள் ஆகியோரின் தவத்தலமும், கூடவே யாக பூமி என்ற புகழும் பெற்றது குரு க்ஷேத்ரம். சொர்க்கத்தையடைய விரும்பும் தேவர்கள் கூட குருக்ஷேத்ரத்தில்தான் சொர்க்கத்தையடையும் பிராப்தி அடைந்தனர். வசிஷ்ட முனிவருக்கும், விசுவாமித்திரருக்கும் தெய்வீக ஞானம் இங்குதான் கிடைத்தது.

ரு நாள் குரு அரசன் உறவினர், நண்பர்களுடன் ஹஸ்தினாபுரத்து குரு வனத்திற்கு வேட்டையாட வந்தார். அவருக்கு ஒரு முனிவரின் சாபம் இருந்தது. அதாவது, இரவில் அவர் பிணமாகி விடுவார் என்பதே அது. அரசர் வேட்டையாடிக் கொண்டு அனைவரையும் விட்டுப் பிரிந்து வெகு தொலைவு சென்று விட்டார். அஸ்தமனம் ஆகும் வேளை நியமப்படி அவர் தன் இருப்பிடம் அடைந்துவிடுவார். அவரிடமிருந்த அம்புகள் தீர்ந்துவிட்டதால் தற்காப்புக்காக அவரால் எய்யப்பட்ட ஒன்றிரண்டு அம்புகளைத் தரையில் குனிந்து அவர் எடுத்தபோது, அவரது கை விரல்களில் மண் புகுந்து விட்டது.

இரவில் தன்னிருப்பிடத்தை அடைந்த அரசர், உயிரற்றவராகி விட்டார். அரசரின் விரல்களில் மட்டும் உயிர் இருப்பதைக் கண்ட அரசி, விடிந்ததும் இதற்குரிய காரணத்தை வித்வான்களிடம் கேட்க, “குருக்ஷேத்ரா மண்ணில் எந்த விரல்கள் படிந்தனவோ, அவை உயிர் பெற்று விட்டன” என்று அவர்கள் கூறினர். எந்த மண்ணில் உயிரற்ற உடலில் உயிர் அளிக்கும் சக்தி உள்ளதோ, அது தானியங்களை உற்பத்தி செய்ய உதவும் என்று உயிர் பெற்ற அரசருக்குத் தோன்ற, உலக நலனுக்காக குருக்ஷேத்ரத்தில் நிலத்தை உழுவதற்காக சிவனிடமிருந்து காளையையும் யமதர்மனிடருந்து எறுமையையும் பெற்று நிலத்தை அவரே உழ ஆரம்பித்தார்.

“நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று தேவேந்திரன் கேட்க, “தவம், சத்யம், பெறுமை, தயை, பரிசுத்தம், தானம், யோகம் இவற்றைப் பயிர் செய்ய நான் நிலத்தை தயார் செய்கிறேன்” என்று கூறினார்.

“இதற்கு விதை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது” என இந்திரன் கேட்க, “அது என்னிடம் உள்ளது” என்று குரு சொல்ல, அதைக் கேட்டதும் இந்திரன் சிரித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

நிலம் பயிரிடத் தயாரானதும் அரசர் முன் மகாவிஷ்ணு தோன்றி, “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டதும், இந்திரனுக்கு கூறிய பதிலையே கூறினார் குரு.

“விதை எங்கே? என்னிடம் கொடு. நான் விதைக்கிறேன், நீ உழு” என்று விஷ்ணு சொன்னதும், அரசர் தனது வலது கையை நீட்டினார். பகவான், அரசரை தனது சக்ராயுதத்தால் ஆயிரமாயிரம் தூண்டாக்கினார். அரசன் தன் உடலை பகவானுக்கு அர்ப்பணித்ததால் மகிழ்ச்சியுற்ற பகவான், அவருக்கு வேண்டிய வரங்களைக் கேட்குமாறு பணித்தார்.

குரு தான் எவ்வளவு நிலம் உழுதாரோ, அவை அனைத்தும் புண்ணிய தலமாய், ‘தர்ம க்ஷேத்ரம்’ என்றாகித் தனது பெயர் நிலைக்க வேண்டும். அங்கு இறப்பவர்களின் பாவ, புண்ணியங்களைப் பாராமல் சொர்க்கம் செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, அப்படியே ஆகுமாறு அருள்புரிந்துவிட்டு பகவான் மறைந்தார். அப்பொழுது முதல் இந்த இடம் குரு அரசரின் பெயரால், ‘தர்மக்ஷேத்ரம்’ எனப் பெயர் பெற்றது. இதனாலேயே, கிருஷ்ண பவான் ஸ்ரீமத் பகவத் கீதை முதல் ஸ்லோகத்தில் குருக்ஷேத்ரத்தை, ‘தர்ம க்ஷேத்ரேம்’ என்றே ஆரம்பிக்கிறார். மஹாபாரதத்திற்கு முன்பிருந்தே குருக்ஷேத்ரம் பிரபலமாக இருந்திருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com