தீபாவளித் திருநாளில் கங்கையும் காசியும்!

தீபாவளித் திருநாளில் கங்கையும் காசியும்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி.சுவாமிநாதன்

தீபாவளி என்று சொன்னாலே, நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு. இது மட்டும்தானா?

இதைத் தாண்டி, 'கங்கா நதி'யும் நினைவுக்கு வருகிறதல்லவா!

தீபாவளியன்று அதிகாலை வேளையில் எந்த நீரில் நீராடினாலும், அது கங்கைக்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, காசிக்குச் செல்லாமலேஉண்மையான கங்கையில் மூழ்காமலே கங்கையில் நீராடிய புண்ணியம் எல்லோருக்கும் கிடைக்கிறது.

தீபாவளி அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் நாம் குளிக்கும் எந்த ஒரு நீரிலும் கங்கை குடி கொண்டுள்ளதாக ஐதீகம். அதனால்தான், குழாய்த் தண்ணீரில் குளித்திருக்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்த்து, 'என்னங்காணும் ஓய்கங்கா ஸ்நானம் ஆச்சா?' என்று பரஸ்பரம் விசாரிப்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம். அதாவது தீபாவளி தினத்தன்று அதிகாலை எல்லோரும் கங்கையில் குளித்த புண்ணியம் பெறுகிறார்கள். இதற்கே இப்படி என்றால், பொங்கிப் பாய்ந்து வரும் நிஜமான கங்கையில் காசி மாநகருக்கே சென்று கங்கா ஸ்நானம் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவர்.


தீபாவளித் திருநாளில் காசியில் கங்கை நதியில் ஸ்நானம் செய்து, ஸ்ரீவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து, தங்க அன்னபூரணியின் அருள் பெற்றுத் திரும்புவது பூர்வ ஜன்ம புண்ணியம். இதற்காகவே காத்திருப்பது போல் காசிக்குப் படையெடுத்துச் செல்லும் தமிழர்கள் ஏராளம். இதிலும் காசியம்பதியோடு வெகு நெருக்கமாக இருக்கும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் (நகரத்தார்கள்) ஆயிரக்கணக்கில் குவிவார்கள்.


நதிகளில் புனித நீராடல் என்பது பெரும் புண்ணியம். இதற்காக பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஆன்மிக அன்பர்கள், காசி மாநகரத்தில் உள்ள கங்கை நதியில் நீராட அவ்வப்போது பயணப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். நதிகள் நம் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன என்பது ஐதீகம். நதிக் கரையிலே சங்கல்பம் செய்து கொள்ளலாம். தர்ப்பணம் செய்து பித்ருக்களைக் கரையேற்றலாம். இவை அனைத்துமே காசி மாநகரில் அமைந்துள்ள கங்கை நதியில் அன்றாடமும் அரங்கேறி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் காசிக்கு வந்து கங்கையின் புனிதத்தைப் பார்த்து வியக்கும் பக்தர்கள் ஏராளம்.

கங்கை நதியைப் பற்றி சுவாரஸ்யமான சில தகவல்கள்

உலகத்தின் மிகப் பெரிய நதிகளுள் ஒன்று. பெருமைகள் வாய்ந்த இந்து சமயத்தோடு அதிகம் தொடர்புடையது. நெடிதுயர்ந்த இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,800 அடி உயரத்தில் இருந்து கங்கை நதி உற்பத்தி ஆகிறது. இந்த இடம்தான் 'கங்கோத்ரி' ஆகும். இது கர்வால் பிரதேசத்தில் ருத்ர ஹிமாலயம் எனும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்கே கங்காதேவிக்கு ஒரு கோயிலும் இருக்கிறது.

வெண்மையான மேகங்கள் போல் அணி திரண்ட பனிக் குகையில் சில்லென்று உருவாகும் இந்தக் கங்கை நதி, சீறிப் பாய்ந்து தொடும் முதல் சமவெளிப் பிரதேசம் ஹரித்துவார்! அங்கிருந்து உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து பிரயாகையில் (அலஹாபாத்) யமுனையோடு கலக்கிறது. இதன் பின், புனிதமான காசியம்பதியில் பயணமாகி, வங்காள தேசத்தில் புகுந்து, பல உப நதிகளாகவும் பிரிகிறது. இறுதியில், நவகாளி என்ற இடத்தில் கடலோடு சங்கமமாகிறது. கங்கை நதியின் நீளம் 1,557 மைல். இதன் நீரால் பயன் பெறும் நிலத்தின் பரப்பளவு 4,32,480 சதுர மைல் ஆகும்.


இமவானின் புத்திரிதான் கங்கை. இவளின் நிறம் வெண்மை. வலது கையில் கருநெய்தல்; இடது கையில் பூர்ண கும்பம். இவளது வாகனம் முதலை. சொர்க்க லோகத்தில் இவளது திருநாமம் மந்தாகினி; பூலோகத்தில் கங்கை; பாதாள லோகத்தில் போகவதி.

இந்த உலகத்தில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்கள் தரும் பலனையும் இவள் ஒருத்தியே கங்கை என்ற பெயரில் தந்து கொண்டிருக்கிறாள். சொர்க்கலோகத்தில் வசித்து வந்த இவள், பகீரதனின் முயற்சியால் பூலோகத்துக்கு வந்தவள். சிவபெருமானை மணக்க விரும்பிய இவள், ஒரு சாபத்தின் காரணமாக சந்தனு மகாராஜாவை மணந்து, பீஷ்மரைப் பெற்றெடுத்தாள்.


கங்கை நதியை ஒட்டி, ஏராளமான திருத்தலங்கள் பிற்காலத்தில் ஏற்பட்டாலும், அவற்றுள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுவது கங்கை உற்பத்தி ஆகும் இடமான கங்கோத்ரியும், கங்கை முதன்முதலில் தென்படும் இடமான கங்காத்துவாரம் எனப்படும் ஹரித்துவாரும், பிரயாகையும், காசியுமே ஆகும். கங்கையின் வரலாறு என்று சொன்னால் இந்த நான்கு இடங்கள்தான் பிரதானம்.

கங்கையின் அவதாரம் பற்றி வேறு சில புராணக் கதைகளும் உண்டு. பாகவதத்திலே, திரிவிக்கிரம (வாமன) அவதாரத்தில் உலகளந்த பெருமானின் வானளாவிய திருப்பாதங்களைப் பிரம்மதேவன் தன் கமண்டல நீரால் கழுவியபோது, பெருகியவளே ஆகாய கங்கை ஆனாளாம். இதனால், கங்கைக்கு, 'விஷ்ணுபதி' என்ற பெயரும் உண்டு. இதே பாகவத புராணத்தில், மற்றோர் இடத்தில், கங்கை விண்ணுலகில் தேவ நதியாகப் பாய்ந்ததும், பின்னாளில் அவள் பூவுலகுக்கு வந்த கதையும் வேறு மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது.


அந்தக் கதை என்ன தெரியுமா? வாமன அவதாரத்தில், பெருமாள் தன் காலை மேலே தூக்கினார் அல்லவா? அந்தக் காலின் நகம் குத்தி, அண்டமானது பொத்தலாகி, அதில் இருந்து நீர் கசிந்தது. அந்த நீர் மெள்ள மெள்ளப் பெருகி துருவ மண்டலத்தில் விழுந்து, வானில் வழிந்தோடி, மேருவில் விழுந்து, பிரம்மலோகத்தை அடைந்து, அங்கிருந்து சீதா, அலக்நந்தா, வவங்க்ஷு, பத்திரா என்று நான்கு திசைகளிலும் நான்கு அருவிகளாகப் பெருகிப் பாய்ந்து கடைசியில் கடலை அடைந்தது. இவற்றுள், அலக்நந்தாவே பரத கண்டத்தில் பாய்ந்த கங்கை நதியாகும். இந்த கங்கை கீழே பூமிக்கு வந்ததாகக் கூறப்படும் நாள் வைகாசி மாதம், சுக்கில பட்சம், திருதியை திதி, அஸ்த நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை என்று புராணம்.


தேவ லோகத்தில் இருந்து வந்த நதி என்பதால், அந்தக் காலத்தில் இதன் கரையில் முனிவர்களும் ரிஷிகளும் ஆசிரமம் அமைத்து, நீராடி தவம் இருந்தனர். ஸ்ரீவிஸ்வநாதரை தரிசித்து இன்புற்றார்கள்.

பொதுவாக, பாரத நாட்டுக் கலாசாரத்தில் தீர்த்த யாத்திரை என்பது மிகுந்த புனிதம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. மனித குலத்தை ஆதி காலங்களில் வளர்த்ததே நதி நாகரிகங்கள்தான்! புனிதம் பெறுவதற்கும் நீர் பயன்படுகிறது. தீட்டைக் கழிப்பதற்கும் அதே நீர்தான் தேவைப்படுகிறது. புனிதமான வேத காரியங்களுக்கும் நீர்தான் பிரதானம்; உயிர் பிரிந்த நிலையில் அந்த வெற்று உடலை சுத்தமாக்குவதற்கும் நீர்தான் பிரதானம். அஸ்தியைக் கலப்பதும் நீரில்தான்.


தெய்வங்களுக்கு நாம் செய்யும் பூஜைகளில்கூட, 'கங்கேச யமுனே சைவ கோதாவரீ ஸரஸ்வதிநர்மதே ஸிந்து காவேரி ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு' என்று சகல நதிகளின் பெயரையும் உச்சரித்து, தீர்த்தப் பாத்திரத்தில் ஆவாஹனம் செய்வது வழக்கம். நதிக் கரையிலேயேதான் பலரும் தவம் இருந்தனர். நதியின் நீரைக் கொண்டு நாம் சுத்தமடைகிறோம். நதியின் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, நம்மை எல்லாம் வாழ வைக்கும் நதித் தாய்க்கே அந்த நீராலேயே அபிஷேகிக்கிறோம்.


இந்துக் கலாசாரத்தில் க்ஷேத்திரமும் தீர்த்தமும் முக்கியம். இவை இரண்டுமே காசியில் சிறப்பு.

தீர்த்த யாத்திரைக்குக் கிளம்புபவன் எப்படி இருக்க வேண்டும் என்று புராணங்கள் சொல்கின்றன. அவை சொல்லும் சில முக்கிய தகவல்கள்: சுமாரான அளவு சாப்பிட்டு விட்டு, விநாயகப் பெருமானைத் துதித்து விட்டுப் புறப்பட வேண்டும்; இறந்துபோன முன்னோர்களை (பிதுர்க்களை) வணங்க வேண்டும்; வேத நெறிப்படி வாழும் பிராமணர்களுக்கு தட்சணை தந்து, அவர்களின் ஆசி பெற வேண்டும்; மனம், குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும் என்று தீர்த்த யாத்திரை செல்பவனுக்குப் பல விதிகளை வைத்திருக்கிறது சாஸ்திரம்.


காசி யாத்திரையில் தண்டம், முண்டம், பிண்டம் ஆகிய மூன்றும் அவசியம் செய்ய வேண்டியவை. அலஹாபாத்தில் உள்ள பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் சங்கமத்தில் முண்டனம் (தலைமுடியைச் சற்று சிரைத்துக் கொள்ளுதல்) செய்து கொள்ள வேண்டும். பின்னர், காசி விஸ்வநாதருக்கு தண்டனிட்டு (நிலத்தில் வீழ்ந்து) வணங்க வேண்டும். அதன் பின் கயாவுக்குச் சென்று, இறந்து போன முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) பிண்டம் போட வேண்டும்.


தீர்த்த யாத்திரை செல்ல உகந்த தினங்களையும் சாஸ்திரம் சொல்கிறது. அவை : ஆடி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலம், சனிக்கிழமை, திரயோதசி, துவாதசி, அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, பிதுர்க்களுக்கான நினைவு தினங்கள், தீபாவளி, சிவராத்திரி, ஆலய தீர்த்தவாரி தினங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும் விட மூன்று நதிகள் சங்கமிக்கும் பிரயாகையில் ஸ்நானம் செய்வது ரொம்ப உசத்தி. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் அலஹாபாத் பிரயாகையில் ஸ்நானம் செய்வது வெகு புண்ணியம்.

காசி திருத்தலத்தின் வடக்குத் திசையில் மேற்கில் இருந்து கிழக்காகப் பாயும் நதியின் பெயர் வருணா. அதேபோல் தெற்குத் திசையில் மேற்கில் இருந்து கிழக்காகப் பாயும் நதியின் பெயர் அஸி. இந்த இரு புராதன நதிகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பையே 'வாராணஸி' என்று வழங்கப்பட்டு வந்தது. அதுவே வாரணாசி என்றும் பனாரஸ் என்றும் வழங்கப்படுகிறது. பொதுவாக, தற்போது காசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


தேவ லோகத்தில் இருந்து கங்கை, பூமிக்கு வந்து வளப்படுத்துவதற்கு முன்பே பெருமைகள் பெற்ற நகராக காசி இருந்து வந்துள்ளது. கங்கா தேவியானவள் பூமிக்கு வந்தபோது காசி நகரைத் தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலின் காரணமாக இங்கு பாய்ந்து சென்றாளாம். காசி மாநகரைக் கண்டதும், இந்த நகரில் தன் புனித நீர் பட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக வடக்கு முகமாகத் திரும்பி ஓடியதாம் கங்கை.


கங்கை நதி வளமாக்கும் காசிக்கு ஏராளமான பெருமைகள் உண்டு. அரசியல் வாழ்க்கையாலோ, மன்னர்களின் அபரிமித செல்வாக்காலோ காசி நகரம் எந்தக் காலத்திலும் புகழ் பெறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட ராஜாங்கமாக எந்தக் காலத்திலும் காசி நகர் நிலைத்திருக்கவில்லை. தனிப்பட்ட மன்னர்கள் இங்கு கோலோச்சியதில்லை.

காசிக்கான முழுப் பெருமையும், ஆன்மிகம் சார்ந்தது; புராணம் சார்ந்தது; எந்த ஒரு தனி நபரும் காசியில் புகழ் பெற்று விளங்கியதாகச் சரித்திரம் இல்லை. கங்கையின் உயர்வால், காசியின் மகிமையால்தான் அந்த தனி நபருக்குப் பேரும் புகழும் கிடைத்திருக்கும்.


ஒரு முறை பிரளயம் வந்து நிலப் பகுதிகள் மறையத் தொடங்கின. நீரானது எல்லா பிரதேசத்தையும் மறைத்து மாயம் செய்தது. ஆனால், காசி மாநகரத்துக்கு மட்டும் எந்த வித சேதமும் நிகழவில்லையாம். காரணம், சிவபெருமான் தன் சூலத்தின் மேல் நின்று இந்த நகரை நிர்மாணித்ததாக புராணம் சொல்கிறது. க்ருத யுகத்தில் திரிசூல வடிவிலும், திரேதா யுகத்தில் சக்கர வடிவிலும், துவாபர யுகத்தில் தேர் வடிவிலும், கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி நகரம் திகழ்வதாக, 'காசி ரகஸ்யம்' எனும் நூல் கூறுகிறது. கங்கை நதியின் மேற்குப் பக்கக் கரையில் பிறைச் சந்திரன் வடிவத்தில் ஈசனார் வாழும் கயிலாய மலையைத் தரிசித்தவாறு வடக்குத் திசையில் அமைந்துள்ளது காசி நகரம். உலகத்தில் உள்ள மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று காசி.

'காச்யாந்து மரணான் முக்தி' என்பது காசியின் பெருமை குறித்துச் சொல்லப்படும் சம்ஸ்க்ருத பழமொழி. அதாவது, 'காசியில் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பதே இல்லை. அவர்களை இறைவன் ஆட்கொண்டு விடுகிறான்' என்பதே இதன் பொருளாகும்.

பாரத தேசத்தில் புனிதமான முக்தி க்ஷேத்திரங்கள் ஏழு. அவை : அயோத்தி, மதுரா, ஹரித்வார், அவந்தி, துவாரகை, காசி, காஞ்சி. முக்தி க்ஷேத்திரம் என்றால் முக்தியைத் தரும் நகரங்கள். அதாவது, இந்த ஏழு நகரங்களில் எவர் ஒருவர் மரணமடைந்தாலும் மோட்சத்தை அடைந்து விடுகிறார்கள் என்பதாக ஐதீகம். காசியில் இறக்கும் பேறு பெற்ற ஒவ்வொருவரையும் பார்வதி தேவி தன் மடியில் இருத்தி, தன் புடவைத் தலைப்பால் அவர்களுக்கு விசிறி விட்டு, அந்த ஜீவன்களை ஆசுவாசப்படுத்துவாளாம். உயிர் அற்றுப் போன அந்த ஜீவனின் காதில், ராம நாமத்தை இறைவன் உச்சரித்து மோட்ச கதியை அருள்கிறாராம். இந்தத் தலத்தில் இறந்தவர்கள், பிரணவ உபதேசத்தைப் பெற்று, சிவ சாயுஜ்யம் (இறைவனோடு கலந்து விடுதல்) அடைந்து விடுகிறார்கள்.

'திருவாரூரில் பிறந்தால் முக்தி; சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி; திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி; காசியில் மரித்தால் முக்தி' என்பது பொதுவாகச் சொல்லப்படும் பழமொழி.

காசியில் உயிர் நீப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடைசி காலத்தில் காசியில் தங்கி, ஆலயங்களை தரிசித்து, அங்கேயே 'அடங்கிப் போகிற' ஆத்மாக்கள் அதிகம் பேர் கங்கைக் கரையில் வசித்து வருகிறார்கள். இதற்காகவே, தங்களின் கடைசி காலத்தில் காசிக்கு வந்து செட்டிலாகி விடுபவர்களும் இருக்கிறார்கள். இங்கேயே தங்கி, தினமும் கங்கையில் ஸ்நானம் செய்து, ஸ்ரீவிஸ்வநாதரை தரிசனம் செய்து, 'முக்தி கொடு முக்கண்ணா' என்று வேண்டுவார்கள். உலகத்துக்கே அதிபதியாக இருக்கிற அம்மையும் அப்பனும், அடியார்களுக்கு முக்தி தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு காசியம்பதியில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் புனித மண்ணில் உயிர் துறந்தால் மோட்சம் நிச்சயம். இப்படி மோட்சப் பதவியை அருளும் தலங்களில் காசிக்கு ஈடான தலம், வேறெங்கும் இல்லை.

'பூர்வ ஜன்மத்தில் ஏராளமான ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்ட பேறு பெற்ற ஜீவன்களுக்கு மட்டுமே இந்த ஜன்மத்தில் காசியின் கதவுகள் திறக்கும்' என்று ஸ்ரீசிவமகா புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com