லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளில் நீண்ட நாட்களுக்கு திறக்கப் படாமலிருக்கும் வாடிகையாளர்களின் லாக்கர்களை திறக்க அந்த வங்கிக்கு உரிமை உண்டு என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி லாக்கர்கள் தொடர்பான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டதாவது:

வங்களில் வாடிக்கையாளர் தனது லாக்கரை நீண்ட காலத்திற்கு திறக்கவில்லை என்றால், வங்கிகள் அந்த லாக்கரை உடைத்து திறக்க அனுமதியுண்டு.  வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள், வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய திருத்தப்பட்ட  வழிகாட்டுதல்களை ரிசர்வ வங்கி உருவாக்கியுள்ளது.

அவ்வாறு திருத்தப்பட்ட ஆர்பிஐ வழிகாட்டுதல்கள்படி நீண்ட நாட்களுக்கு திறக்கப்படாமல் இருக்கும் வங்கி லாக்கரில் உள்ளவற்றை, அதன் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு மாற்றவும் அல்லது பொருட்களை வெளிப்படையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கவும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் வாடிக்கையாளர், 7 வருட காலத்திற்கு தொடர்பில் இல்லாமல் இருந்தாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி லாக்கர் வைத்திருப்போருக்கு, லாக்கரை உடைக்கும் முன் தகவல் அளிக்கப்படும். ஒரு கடிதம் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளும் அனுப்பப்படும்.

வங்கியின் அதிகாரி மற்றும் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் லாக்கரை உடைக்க வேண்டும் என்பதோடு, முழு செயல்முறையும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் மேலும் கூறுகின்றன. லாக்கரை உடைத்த பிறகு, வாடிக்கையாளரால் உரிமை கோரப்படும் வரை அதில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக ஒரு சீல் செய்யப்பட்ட உறையில் வைக்கப்படும்.

இது தவிர, வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு, வங்கியில் தீ விபத்து அல்லது கட்டடம் இடிந்து விழுந்து சேதம் அடைதல் போன்ற சமயங்களில் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் புதிய விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவின் காரணமாக வங்கி லாக்கர் மற்றும் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. வங்கி லாக்கரில் அபாயகரமான பொருட்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களை வைக்கக்கூடாது. அதை மீறினால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

-இவ்வாறு ரிசர்வ் வங்கி புதிய விதிகள் ஏற்படுத்தியதாக அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com