
சபரிமலை ஐயப்பனுக்கு கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நெய்த்தேங்காய் அபிஷேகம் செய்து வரலாறு படைத்தார்.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் தெரிவித்ததாவது:
சபரிமலை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது பக்தர்களின் மிக முக்கியமான வழிபாடு ஆகும். இதற்காக நெய் நிரப்பப்பட்ட 1 அல்லது 2 தேங்காய்களை வழக்கமாக பக்தர்கள் தங்கள் இருமுடி கட்டுடன்சுமந்துவருவார்கள். சன்னிதானத்தில் அந்த தேங்காயை உடைத்து அதில் உள்ள நெய்யை சேகரித்து, அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்வதுவழக்கம்.
அந்த வகையில் சபரிமலை வரலாற்றிலேயே பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர் 18 ஆயிரம் நேய்த் தேங்காய்களை இன்று ஐய்யப்பனுக்கு அபிஷேகம் செய்தார். அவர் தான் நினைத்த காரியம் அய்யப்பன் அருளால் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இவ்வாறு நேர்த்திக்கடன் வேண்டிகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 18 ஆயிரம் தேங்காய் மற்றும் அதற்கு தேவையான நெய் ஆகியவற்றை லாரி மூலம் பம்பைக்கு அனுப்பிவைத்தார். மேலும், நெய் அபிஷேகத்திற்கான கட்டணமாக ரூ.18 லட்சத்துக்கான வரைஓலையையும் அனுப்பிவைத்தார். அந்த வகையில் நெய்நிரப்பப்பட்ட அந்த 18 ஆயிரம் தேங்காய்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. சபரிமலை வரலாற்றில் ஒரே பக்தர் 18 ஆயிரம் நெய்தேங்காயை அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்வது இதுவே முதல்முறை.
-இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார வாரியர் தெரிவித்தார்.