பள்ளி, கல்லூரிகளில் விரைவில் யோகா: அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 415 மாணவர்கள், யோகாவில் நேற்று கோல்டன் புக் ஆஃப் ரெகார்ட்சுக்காக உலக சாதனை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நீதிபதி சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதையடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரைவில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பெறும். உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்துக் கொள்ள யோகா மிகவும் அவசியம். கலைஞர் கருணாநிதி வயது முதிர்ந்த நிலையிலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
அதேபோல, தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தி வந்தார். அதை தற்போது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
–இவ்வாறு அவர் தெரிவித்தார்.