மிஸ்.திருநங்கை 2022; சென்னையைச் சேர்ந்த சாதனா பட்டம் வென்றார்!

மிஸ்.திருநங்கை 2022; சென்னையைச் சேர்ந்த சாதனா பட்டம் வென்றார்!
Published on

ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் சித்திரை கூவாகம் திருவிழா வெகு பிரபலம். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் இந்தவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் திருவிழா நடத்தப்படாத சூழலில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 'சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி' நாளி (ஏஎப்ரல் 19) நடக்கிறது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, நாளை மறுநாள் (ஏப்ரல் 20) தேரோட்டம் நடைபெறுகிறது.

திருநங்கைகளுக்கான இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், நாட்டின் பல மாநிலங்கள் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நேற்று மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மிஸ் திருநங்கை திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னிஜி நாயக் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ், நடிகர் சூரி, நடிகை நளினி, உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மிஸ் திருநங்கை அழகிப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில்

மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 35 பேர் தேர்வாகி அடுத்தகட்டமாக மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இப்படி பல சுற்றுக்கள் முடிவில் சென்னையைச் சேர்ந்த சாதனா 'மிஸ்  திருநங்கை' யாக வெற்றிவாகை சூடினார்,  மதுமிதா (சென்னை), 2-ம் இடத்தையும், எல்சா (சென்னை 3-ம் இடத்தையும் பிடித்தனர்.இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது;

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு எப்பொழுதும் துணை நிற்பது திமுக தான். இந்த 3-ம் பாலினத்தவருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்றுத் தர திமுக முயற்சி செய்யும்.

-இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com