பேரறிவாளன் விடுதலை: கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸார் போராட்டம்!

பேரறிவாளன் விடுதலை: கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸார் போராட்டம்!

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதர்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரச் கட்சியினர் அறப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பேரறிவாளன் விடுதலைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் தங்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியினர் வாயில் வெள்ளை நிறத் துணியை கட்டி, கைகளில் பதாகைகளை ஏந்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற மௌன போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி இதுகுறித்து தெரிவித்ததாவது;

பேரறிவாளன் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு குழப்பத்தை அளித்துள்ளது. முன்னர் குற்றவாளி என அறிவித்த அதே நபரை இப்போது நீதிமன்றம் நிரபராதி என்று தற்போது விடுவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கவில்லை. ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்பத்திற்கு பதில் என்ன? மேலும் இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியான கார்த்திகேயன், ராஜீவ்காந்தி கொலையில் பேரறிவாளன் முக்கிய குற்றவாளி என தெரிவித்துள்ளார். இப்படி தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்தால் தேசத்தின் சட்ட ஒழுங்கு நிலமை சீர்கெடும். இந்த விவகாரத்தில்  தமிழக காங்கிரஸ் சார்பில் நியாயமான வருத்தங்களை இப்போராட்டம் மூலம் வெளிக்கொண்டு வருகின்றோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் தலைமையில் அறிவழியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com