ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்; ஓபிஎஸ் ஆஜர்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்; ஓபிஎஸ் ஆஜர்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக விசாரணைக்கு ஆஜரானார்…

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜெயலலிதாவின் உறவினர்கள், மருத்துவர்கள், பாதுகாவலர்கள், அரசு அதிகாரிகள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே ''மருத்துவர்களை விசாரிக்கையில் மருத்துவ வல்லுநர்கள் குழு உடன் இருக்க வேண்டும்'' என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை தடைபட்டது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, அண்மையில் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 21) விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு முன் 8 முறை ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம், இன்று முதல் முறையாக காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்.

இதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடமும் இன்று ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரானார். இதையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com