
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார்.தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, இன்றும் நாளையும் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.
இதுகுறித்து மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:
பிரிட்டன் பிரதமர் ஜான்சனின் இரண்டு நாள் இந்தியப் பயணம் முதலில் குஜராத்தில் தொடங்கவுள்ளது.இதனையடுத்து, நாளை (ஏப்ரல் 22) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ரீதியான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மேலும்,உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்தும்,இந்தியாவை பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றும் மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கு குறித்தும்,ராணுவ வன்பொருள் கூட்டுத் தயாரிப்பிற்கான தொழில்நுட்பங்களை மாற்றுவதற்கும் இங்கிலாந்து தனது ஒத்துழைப்பை நீட்டிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் பேசவுள்ளனர்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக போரிஸ் ஜான்சன் இருந்தபோது இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.