74 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள்; குடியரசு தலைவர் வழங்கினார்!

74 பேருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள்; குடியரசு தலைவர் வழங்கினார்!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டின் 74 பிரபலங்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நாட்டின் மிக உயரிய இந்த பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, தொழில், மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை, பொது விவகாரங்கள் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 4 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இம்மாதம் 21-ம் தேதி நடைபெற்ற முதல் விழாவில் 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.இதையடுத்து இந்த விருதுகள் வழங்குவதற்கான 2-வது விழா, நேற்றுநடைபெற்றது. இதில் 74 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டது.

இந்த விழாவில் பாரம்பரிய இந்துஸ்தானி இசைப் பாடகர் பிரபா அத்ரே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த கல்யாண் சிங்குக்கு பதிலாக அவரது மகன் ராஜ்வீர் சிங் விருதை பெற்றுக் கொண்டார்.

பிரபல இந்தி மற்றும் வங்காள நடிகர் விக்டர் பானர்ஜிக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி எல்லா, அவரது மனைவி சுசித்ரா கிருஷ்ண எல்லா, கல்வியாளர்கள் டாக்டர் பிரதிபா ராய், ஆச்சார்ய வசிஷ்ட திரிபாதி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

பாரா ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்தில், பிரமோத் பகத், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, டாக்டர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக் கலைஞர் ஏ.வி.முருகையன் உள்ளிட்டோருக்கு பத்மஶ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com