நீட் தேர்வு விவகாரம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வு விவகாரம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்!

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அதிமுக, பா.ஜ.க, பா.ம.க, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது..

அதன்படி, ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் தற்போது வரை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை.இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிருந்த போதிலும், மூன்று முறை அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான், நீட் தேர்வு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூடி முடிவெடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த வகையில் இன்று நடைப்பெறும் ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகள் அனைவரின் கருத்துகளையும் கேட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.கவும் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com