நீலகிரி ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் சிசிடிவி-யில் பதிவு!

நீலகிரி ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் சிசிடிவி-யில் பதிவு!

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் 4 பேரைத் தாக்கிக் கொன்ற புலியைக் கண்டறிய முடியாமல் திணறிய நிலையில், 8 நாள்களுக்குப் பின் அந்த புலியின் நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமார் நீரஜ் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், மசினகுடி உள்பட்ட பகுதிகளில் 4 மனிதா்களையும், 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் கொன்ற புலியை தமிழக மற்றும் கேரள வனத் துறையினா், அதிரடிப்படையினா் இணைந்து பல குழுக்களாகப் பிரிந்து தீவிரமாகத் தேடி வருகின்றனா். அந்த புலி அடிக்கடி இடத்தை மாற்றியதால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியவில்லை. பின்னர் மசினகுடி, சிங்காரா வனப் பகுதிகளுக்குள் அந்த புலி நுழைந்தது கண்டறியப்பட்டது.

அதன் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப் பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக புலியின் நடமாட்டம் எதிலும் பதிவாகவில்லை. இந்நிலையில், ஓம்பெட்டா வனப்பகுதியிலுள்ள வனத்துறை தானியங்கி கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து புலியை பிடிப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டி23 எனப் பெயரிடப்பட்ட அந்த புலியின் ரோமம், எச்சம் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஹைதராபாதில் உள்ள மத்திய உயிரியல் செல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com