
சென்னை தி.நகரில் பிரபலமான பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை இன்று இந்தியன் வங்கி சீல் செய்து, போலீசார் குவிக்கப் பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது;
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் பல வருடங்கள் முன்பு இந்தியன் வங்கியில் சுமார் 120 கோடி ரூபாய் கடன் வாங்கியதுடன் அதற்கான வட்டியும் செலுத்தத் தவறியது. இந்த கடனுக்கான வட்டித் தொகையைக் கட்டச் சொல்லி பலமுறை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியதற்கும் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்தியன் வங்கி 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அங்கு வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, கடன் தொகையை வங்கிக்குச் செலுத்தும்படி சரவணா ஸ்டோர்ஸூக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் பணம் செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று கடையை ஜப்தி செய்து சீல் வைத்தது இந்தியன் வங்கி.
–இவ்வாறு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தி.நகரில் இருக்கும் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் இருக்கும் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையை இன்று காலை ஜப்தி செய்யப்பட்டது. நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில், போலீஸ் துணையுடன் இரு கடைகளும் ஜப்தி செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐ.டி ரெய்டு நடந்த நிலையி, ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.