டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை குதூகலிக்க வந்த வடிவேலு... கலகலப்பான ஷோவின் அசத்தல் புரோமோ!

Venkatesh Bhat and Vadivelu
Venkatesh Bhat and Vadivelu

விஜய் டிவிக்கு போட்டியாக வந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் மிகவும் பேமஸான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை 4 சீசன் ஓடியுள்ள நிலையில், தற்போது 5வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் சில கோமாளிகள் விலகியுள்ளனர். இவருக்கு பதிலாக நிகழ்ச்சியில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்துள்ளார். எப்போதும் உள்ள சீசன் அளவு இந்த சீசன் இல்லை என்றே பெயர் எடுத்துள்ளது. பெரியளவில் காமெடி இல்லை என்றே ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

செஃப் வெங்கடேஷ் பட் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகும் போதே புதிய நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். தொடர்ந்து சன் டிவியில் குதித்த வெங்கட் பட், குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். அதுமட்டும் இன்றி விஜய் டிவியில் இருந்த ஜிபி முத்து, மோனிஷா, பரத், தீபா போன்ற கோமாளிகளும் சன் டிவிக்கு தாவி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குக்வித் கோமாளி நிகழ்ச்சியை போன்றே இதுவும் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமாக பார்த்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காப்பி என ஆரம்பத்தில் பலர் விமர்சித்தாலும், நேற்றைய எபிசோடு மூலம் இதில் பல்வேறு புதுமைகள் இருப்பது தெரியவந்தது. அதன்படி இந்நிகழ்ச்சியில் உள்ள 9 போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு செஃபும் தலைவராக ஒதுக்கப்படுவர். அதில் எந்த அணியில் இருந்து போட்டியாளர் எலிமினேட் ஆகிராரோ, அவரோடு சேர்த்து அந்த அணியை சேர்ந்த செஃபும் வெளியேற வேண்டும்.

அதுமட்டுமின்றி இந்த டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் குக்குகளாக பெப்சி விஜயன், சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, சிங்கம் புலி, ஐஸ்வர்யா தத்தா, நரேந்திர பிரசாத், சாய் தீனா, ஷாலி நிவாஸ், சுஜாதா சிவகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் டூப் குக்குகளாக ஜிபி முத்து, தீபா, தீனா, மோனிஷா, அதிர்ச்சி அருண், பரத், கதிர், செளந்தர்யா, முகுந்த், விஜய் ஆகியோர் பங்கெடுத்து உள்ளனர். இதன் அறிமுக எபிசோடு கலகலப்புக்கு பஞ்சமின்றி இருந்த நிலையில், இறுதியில் தன்னுடன் இன்னொரு பிரபலம் இணைந்து நடுவராக பணியாற்ற உள்ளதாக ட்விஸ்ட் கொடுத்து இருந்தார் வெங்கடேஷ் பட்.

அதன் படி அடுத்தவாரத்திற்கான புரோமோ வெளியாகி ரசிகர்களை குதூகலித்துள்ளது. அதில், வைகை புயல் வடிவேலு சூப்பராக எண்ட்ரி கொடுத்தார். காமெடிக்கு பெயர் போனவர் தான் வடிவேலு, பல ஆண்டுகாலமாக சினிமாவில் கோலோச்சிட்டு உள்ள வடிவேலு தற்போது இந்த நிகழ்ச்சியில் களமிறங்கியது ஷோவை மேலும் கலகலப்பாக்கியுள்ளது. புரோமோவே எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறும் என்றே சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com