

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முன்னணி போட்டியாளராக இருப்பவர் நடிகை விசித்ரா, இவர் தனது சினிமா கேரியரில் சந்தித்த கசப்பான அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துக்கொண்டது தற்போது தெலுங்கு திரையுலகினரை கலங்கடிக்க வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட என பல்வேறு மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகை விசித்ரா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் குக்வித் கோமாளி ஷோ மூலம் நல்ல பிரபலமாகினார். அதனைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படம் நடித்த இவர் திடீரென சினிமாவை விட்டு விலகினார். இதற்கான காரணங்கள் அப்போது வெளி கொண்டுவரப்பட்டிருந்தாலும் பெரிதாக யாரும் அவரின் புகாருக்கு செவிசாய்க்கவில்லை என விசித்ரா கூறிகிறார். இந்த நிலையில், பிக்பாஸ் 7வது சீசனில் நடிகை விசித்ரா கடந்த சில வாரங்களாகவே வோட்டிங்கில் முன்னணியில் இருக்கிறார். இதனால் பைனலிஸ்ட்டாக கூட விசித்ரா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸில் பூகம்பம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில், தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பத்தை பகிரவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய அவர், தெலுங்கு மொழியில் 2001ம் ஆண்டு முன்னணி நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அப்போது ஷூட்டிங்கில் அவரை பார்த்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவர் என் பெயரை கூட கேட்காமல் ”நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்படி என்றால் இரவு என் அறைக்கு வா” என தகாத முறையில் நடந்துக்கொண்டார். ஒரு பிரபல நடிகரின் செயல் எனக்கு அதிர்ச்சியாகவும், என்னை நானே அசிங்கமாக நினைக்கு அளவுக்கு மனவேதனையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது சண்டை காட்சியில் ஒருவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை கையும் களவுமாக பிடித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஒப்படைத்த போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை விட்டுவிட்டு சண்டை பயிற்சி மாஸ்டர் என்னை ஓங்கி கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார். நான் திகைத்து நின்றபடி, அழுதுகொண்டே அங்கிருந்து வந்துவிட்டேன். இது குறித்து யூனியனில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை விட்டு வேற வேலையை போய் பாரு என்றும், போலீசில் போய் புகார் அளிங்க என தெரிவித்ததாக கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவ பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விசித்ராவுக்கு ஆதரவு குரல் நீட்டி வருகின்றனர். மேலும், விசித்ரா கூறிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 2001ம் ஆண்டு விசித்ரா நடிப்பில் தெலுங்கு திரையுலகில் முக்கிய ஸ்டாரான பாலையா நடிப்பில் வெளியான படத்தையும், அவர் விவரித்த சண்டை காட்சி இடம்பெற்ற படகாட்சிகளையும் எக்ஸ் தளத்தில் பகிர தொடங்கினர்.
இதற்கிடையில், விவாத நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினியின் கபாலி படத்தில் நடித்த இந்தி நடிகை ராதிகா அப்தேவும் இதேபோன்றதொரு புகார் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விசித்ரா மற்றும் நடிகை ராதிகா அப்தேவிடம் ஆபாசமாக நடந்துக்கொண்டது நடிகர் பாலையாதான் என அவர் பெயரை எக்ஸ் தளத்தில் ட்ரோல் செய்யத் தொடங்கினார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.