பிக்பாஸில் நடந்த உருவ கேலி.. நிக்ஸன் பேச்சால் வினுஷா வேதனை.. இந்த வாரம் சம்பவம் செய்வாரா கமல்?

nixen - vinusha
nixen - vinusha
Published on

பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா மூலம் அறிமுகமானவர் நடிகை வினுஷா. மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்த வினுஷாவுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் 7 விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், தானுண்டு தன் வேலையுண்டு இருந்த வினுஷா திடீரென எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்றைய எபிசோட்டில் நிக்ஸன் பேசியதாக ஒரு கருத்து ஒளிபரப்பப்பட்டது. அதில், நிக்ஸன் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து கொச்சையாக பேசியிருப்பார். இதற்கு விளக்கம் கொடுத்த அவர், தான் தவறாக பேசவில்லை என்றும், அப்படி நினைத்தால் சாரி என்றும் கூறினார். மேலும் இதை தான் நேரடியாகவே வினுஷாவிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதனை வெளியில் இருந்து பார்த்து கொந்தளித்த வினுஷா, தனது மனக்குமுறலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நான் இப்போது பிக்பாஸ் உள்ளே இல்லை என்றாலும் நிக்ஸன் விவகாரத்தை பற்றி பேசவும், எனக்காக நிற்கவும் விரும்புகிறேன். முதல் வாரத்தில், நிக்ஸனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. நான் அவரை ஒரு சகோதரனாக உண்மையாகவே கருதினேன். நான் அவரிடம் அப்படித்தான் நடந்து கொண்டேன். ஆரம்பத்தில் நிக்ஸன் எப்போதும் என்னை கேலி செய்யத் தொடங்கினார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. அது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

இருப்பினும், நேரம் செல்லச் செல்ல நிக்ஸன் தன் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினார். மேலும் அவரது நடவடிக்கைகள் என்னைக் காயப்படுத்தியதால் ட்ரோல் செய்வதை நிறுத்தும்படி அவரிடம் சொன்னேன். இந்த ட்ரோல் சம்பவதுக்காக மட்டுமே ஒரு நாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் என்னை உருவக்கேலி செய்ததற்கு எல்லாம் நிக்ஸன் மன்னிப்பு கேட்கவில்லை.

நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்ஸன் என்னை உருவக்கேலி செய்தது பற்றி பேசவோ அல்லது மன்னிப்போ கேட்கவோ இல்லை. நிக்ஸன் எனக்கு இவை அனைத்தும் தெரியும் என்றும் பொய்யான தகவலை சொல்கிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான் நான் அதை பற்றி தெரிந்து கொண்டேன். நடந்த சம்பவத்திற்கு இப்போது நிக்ஸன் மன்னிப்பு கேட்டாலும் அது அவரை நல்ல நபராக மாற்றாது. புல்லி கேங்களுக்கு, இது எனக்கு வேடிக்கையான ஒன்றோ அல்லது நகைச்சுவையான ஒன்றோ அல்ல. கடந்த வாரத்தில் "உரிமை குரல்" எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே? எனக்காக குரல் எழுப்பிய விசித்ராவிற்கு நன்றி.

நான் வீட்டில் இருக்கும் போது அவர் எனக்கு ஏற்படுத்திய வலியை மீறி நிக்ஸனை மிகவும் மதித்தேன். அவரை ஒரு சகோதரனைப் போல கருதினேன். இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோ மற்றும் கருத்தைப் பார்த்த பிறகு, நான் அவர் மீதான மரியாதையை இழந்துவிட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவார் என நம்புகிறேன். இந்த பிரச்சினையில் நிக்ஸனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கும், எனக்காக நிற்கும் மக்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிக்ஸனால் ஒரு பெண் உண்மையில் பாதிக்கப்பட்டு கருத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு கமல்ஹாசன் என்ன பதிலடி கொடுப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com