விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டிப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எப்போதும் இல்லாததாக இந்த சீசனில் தான் ஸ்மால் பாஸ், பிக்பாஸ் என 2 வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படும் 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள். இவர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து கொடுக்க வேண்டும். முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆன நிலையில், 2வது வாரம் பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாததால் தானாகவே வெளியேறினார்.
தொடர்ந்து 3வது வாரம் விஜய் எலிமினேட் செய்யப்பட்டார். இதோடு 3 பேர் வீட்டை விட்டு வெளியேறியதால் ஆட்டம் சூடுபிடிக்க பொதுவாக வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ஒருவர் உள்ளே அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இந்த சீசனில் மொத்தம் 5 பேர் உள்ளே அனுப்பப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெளியே இருந்து போட்டிகளை உன்னிப்பாக கவனித்து விட்டு உள்ளே செல்லப்போபவர்கள் யார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.