
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும், சில ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதற்கான முக்கிய காரணம், இதில் வரும் கோமாளிகள்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குவது வழக்கம். கடந்த ஜனவரியில் 'குக் வித் கோமாளி' சீசன் 5 தொடங்கியது. அந்த சீசன்களில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சிக்கு சென்றதால், மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக வந்தார்.
இந்த முறை ரக்ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சினிமா மற்றும் சீரியல்களை விட, இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் அதிகம். இதன் நான்கு சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால், கடந்த ஆண்டு நிறுவனம் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது. இதனால் ஐந்தாவது சீசனையும் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து விலகினர்.
இதன் காரணமாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகினார். மேலும், கடந்த சீசன் பல சர்ச்சைகளை சந்தித்தது. மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே நடந்த பிரச்சனைகள் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் வெடித்தன. இதனால் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது, அவர் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பிரியங்கா குக் வித் கோமாளி சீசன் 5 டைட்டிலை பெற்றார்.
குக் வித் கோமாளி 6 தொடங்குமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவியது. ஆனால், குக் வித் கோமாளி 6 விரைவில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் புகழ், ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா இந்த சீசனில் சப்ரைஸாக கலந்து கொள்கிறார். அவர் பிக் பாஸ் சீசன் 8 இல் இரண்டாம் இடத்தை பிடித்தார். சௌந்தர்யா ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.