
சென்னை மக்களை மீன் குழம்பால் கட்டி இழுத்த மெரினா சுந்தரி அக்கா, தற்போது உயர பறந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார்.
பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஷோவை வெங்கடேஷ் பட்டும் தாமுவும் நடுவர்களாக இருந்து நடத்தி வந்தனர். அந்த வகையில் இதுவரை 5 சீசன் முடிந்த நிலையில், தற்போது 6வது சீசன் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கியது.
ஏற்கனவே கடந்த சீசனில் வெங்கட் பட் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்ற நிலையில், மாதம் பட்டி ரங்கராஜும், செப் தாமுவும் நடுவர்களாக இருந்தனர். இதை தொடர்ந்து இந்த சீசனில் செப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதால், அவர் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு பதில் செப் கவுசிக் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தான் மற்றொரு நடுவராக உடன் இருந்தார்.
பிக்பாஸ் சவுந்தர்யா, தங்கதுரை, ராமர், புகழ், குரேஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்து கொண்டனர். மேலும், போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், தேனடை மதுமிதா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா, செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, தொகுப்பாளர் ராஜு, ஜெயமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நடுத்தர மக்களின் பிரதிபலனாக திகழும் சுந்தரி அக்காவுக்கு சென்னையில் பெரிய மவுசு உள்ளது. பாண்டிச்சேரி மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரி அக்கா ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தவர். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த இவர், பாட்டியின் இட்லிகடையை பார்த்து வளர்ந்ததால், உணவுத் தொழிலில் ஆர்வம் வந்துள்ளது.
திருவல்லிக்கேணியில் வசிக்கும் தனது சித்தி வீட்டிற்கு வந்து செல்லும்போதுதான், சேகரை சந்தித்துள்ளார். நட்பு காதலாகி பின்பு தம்பதிகளாகியுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு சிங்கிள் பெண்மணியாக சென்னை மெரினாவில் தள்ளுவண்டியில்தான் ஹோட்டலை ஆரம்பித்தார். இவர் வைக்கும் சூடான சுவையான மீன் குழம்புக்கு வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.
25 வருட ஓய்வில்லா கடின உழைப்புதான் சுந்தரி அக்காவை தற்போது சின்னத்திரை நட்சத்திரமாய் ஜொலிக்க வைத்துள்ளது. முதல் நாளிலேயே தனது பெருமையான மீன் குழம்பை செய்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பெரிதளவும் சுந்தரி அக்காவின் பெயரை கேட்டவர்கள் கூட இன்று சின்னத்திரையில் அவரின் முகத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
சுந்தரி அக்காவின் இந்த அபரிவிதமான வளர்ச்சி பல பெண்களுக்கு உந்துதலாக அமைந்துள்ளது.