ஈஸ்வரி பொழைச்சு வந்துட்டாளா..? - இல்லத்தரசிகளின் தூக்கத்தை தீர்மானிக்கும் மெகா தொடர்கள்!

ethirneechal serial
ethirneechal serial
Updated on

ஆசிரமத்தில்,பல குழந்தைகளுக்கு தாயாக பாசமுடன் செயல்படும் பணி பெண்ணும்,தன் குழந்தை என்று வருகின்றபோது,தன்னையும் அறியாமல் அதிகப் பாசப் பிணைப்புக்கு ஆளாவாளாம்!’தானாடா விட்டாலும் சதையாடும்’என்பது இதனால்தான் போலும்.அப்படி ஒரு பாசப் பிணைப்பு தினமும் வீட்டிற்குள் வந்து போகும் மெகா சீரியல்களுடன் நமது மக்களுக்கும் ஏற்பட்டு விட்டது.ஒவ்வொரு சானலிலும் தினந்தோறும் பல திரைப்படங்களும்,ஓடிடியில் பல மொழிப்படங்களும்

அன்றாடம் புற்றீசல் போல றெக்கை கட்டிப் பறந்தாலும், சீரியல்களைப் பார்த்தால் தான் சிலருக்குத் தூக்கமே வருகிறதாம்.

நண்பர் ஒருவர், தினசரி தனது மனைவி சமையலை ஏதாவது குறை கூறியபடியே நன்றாக சாப்பிடுவார். வெளியில் வந்ததும், ‘அவ நன்றாகவே சமைப்பாள். இருந்தாலும் ஏதாவது சொல்லி எனக்கு பழக்கமாகிவிட்டது!’ என்பார். அதைப்போலவே பலரும் மெகா சீரியல்களை ‘ஜவ்வு மிட்டாய்!’, ‘தேவையற்ற இழுத்தடிப்பு!’, ‘சிந்துபாத் கதையிடம் போட்டிக்கு போகிறார்கள்!’ என்றெல்லாம் கமெண்ட் அடித்தாலும், நான்கு நாட்கள் தொடர்ந்து ஊரை விட்டு வெளியில் தங்க வேண்டியிருந்தால், அங்கு ‘சீரியல்கள் பார்க்க முடியும்ல’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் பயணிக்கவே தயாராகிறார்கள்.

சமீபத்தில் 10 நாட்கள் பெங்களூர் சென்று தங்கி வந்த பாட்டி, வீட்டில் நுழைந்ததும் தன் மகளிடம் கேட்ட முதல் கேள்வி, "ஈஸ்வரி பிழைத்து எழுந்து வீட்டுக்கு வந்துட்டாளா?" என்பதுதான்! மகளும் பிட்டான பதிலாக, "அதையேம்மா கேட்கிறாய்? அந்த ஈஸ்வரி மாறியே வந்துட்டாங்க! ராத்திரி பாரு தெரியும்!" என்று ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை மாற்றம் செய்ததைச் சூசகமாகத் தெரிவிக்க, பாட்டியோ, "எதுக்கு ராத்திரி வரை காத்திருக்க வேண்டும்? இப்போதே முன்கூட்டியே (Early Access) ஒளிபரப்பி விடுகிறார்களே" என்று கூறியதுடன், டி.வி.க்கு எதிரே அமர்ந்தும் விட்டார்.

'எதிர்நீச்சல்' தொடரில் ஈஸ்வரிக்குக் குறுகிய கால நினைவுத் தடுமாற்றமாம்! (Short Term Memory Loss). கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் நேரம் பார்த்து ஈஸ்வரி அந்த நோய்க்கு ஆளாக, ஜனனியின் குறிக்கோள் ஈடேறுமா? என்ற எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறார்கள். ஆதி குணசேகரனும் அவர் தம்பிகள் இருவரும் ஈஸ்வரியின் நினைவுத் தடுமாற்றத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயல, ராவணன் ‘எவரையும் விடமாட்டேன்!’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். அதிகமான காசு கையில் இருந்தால் எதையும் சாத்தியமாக்கலாம் என்ற சமுதாய நடைமுறையை நன்கு பயன்படுத்துகிறார்கள். ஈஸ்வரிதான் ஜனனி சொல்வதை நம்ப மறுக்கிறார் என்றால், ரேணுகாவும் நந்தினியும்கூட ஜனனிக்கு ஆதரவாக பேசாமல் மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. முந்திரிக்கொட்டை நந்தினி, முழுதாக அமைதி காப்பது போல் காட்டப்படுவது குறையாகவே தென்படுகிறது.

சன் டிவியின் பெரும்பாலான சீரியல்கள் முடிவை நெருங்கி வருவதாகவே தோன்றுகிறது. மற்றொரு சீரியலான ‘மூன்று முடிச்சு’ ஒரு மணி நேர ஸ்லாட்டாகி, நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்த ரஞ்சித், சைக்கோவாக காட்டப்படுகிறார். ஒரு கொலையை செய்துவிட்டு, ஆதாரங்களையும் பொதுவெளியில் விட்டுவிட்டு அல்லாடுகிறார். அவை ஒவ்வொன்றாக கிராமத்து பெண்ணான நாயகி நந்தினியின் கைகளில் கிடைக்கின்றன. பெண்களுக்குச் சம உரிமைக்கும் அதிகமாகவே உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்று உரத்த குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், தொடர்ந்து நந்தினி சிறுமைப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாரத்தில் ஒரு எபிசோடிலாவது அவள் கை ஓங்குவதாக காட்டப்பட்டால் விறுவிறுப்பு கூடும். அதிகப் பொறுமையும், கண்மூடித்தனமான எஜமான பற்றும் எரிச்சலையே கொண்டு வருமென்பதை இயக்குநர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். கொலைகார ரஞ்சித் விரைவில் பிடிபடுவாரா?

இன்னொரு மெகா தொடரான ‘சிங்கப் பெண்ணே’வில், ஆனந்தி தன் வயிற்றில் தந்தை யாரென்று தெரியாமல் வளரும் குழந்தைக்கு, ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பதிவிடுகையில், தான்தான் தந்தை என்று அன்பு ‘கிளைம்’ (Claim) செய்து கொள்வதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் மகேஷோ குழந்தையின் இதயத் துடிப்பில் லயித்து அதனையே கேட்டு ஆறுதல் பெறுகிறான். குழந்தையின் உண்மைத் தந்தை யார்? என்ற விபரத்தை ரகசியமாகவே பாதுகாத்துக் கொண்டு செல்கிறார்கள். நமக்கும் யார்தான் அது? என்று அறிந்துகொள்ளும் ஆவல் மேலோங்கிக்கொண்டே செல்கிறது.

நமது சீரியல் இயக்குநர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. ‘ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது’ என்ற கிராமப் பழமொழிக்கு இணங்க, ஒன்றுமே கதையில் நகரவில்லை என்றாலுங்கூட, ஒரு வாரத்தை, அதாவது ஏழு எபிசோடுகளை எளிதாக நகர்த்திவிடும் தந்திரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்!

‘எவ்வளவு குற்றங்குறை இருந்தாலும் இது நம்ம வீட்டுப் பிள்ளை!’ என்று உரிமை கொண்டாடுவதை போல, நமது மக்களும் அன்றாடம் நம் வீட்டுக்குள் வரும் தொடர்களை பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள்!

அரசியல் மாற்றங்கள் நிகழ்வதைப் போல, மெகா தொடர்களும் முடிந்து புது தொடர்கள் ஆரம்பமாகலாம் என்று தோன்றுகிறது. அப்போதாவது சிறந்த எழுத்தாளர்களின் உயரிய படைப்புகளை தேர்ந்தெடுத்து, அதிக நாட்கள் இழுக்காமல் அடிக்கடி முடித்தால், சீரியல்களின் மீதான சிறப்பு கூடும்.

இதையும் படியுங்கள்:
ஆசை 1x; மகிழ்ச்சி 10x: அந்த காலம்... அது வசந்த காலம்...
ethirneechal serial
logo
Kalki Online
kalkionline.com