சன், கலர்ஸ், Zee என பல்வேறு சேனல்கள் இருந்தாலும் விஜய் டிவிக்கு எப்போது மவுசு அதிகம் தான். அந்த வகையில் தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த விஜய் டிவியில் வரும் சீரியல்களை போன்றே அதில் வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களை போன்றே விஜய் டிவியில் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது.
ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் என மட்டும் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து, சூப்பர் சிங்கர் ஜீனியர், சூப்பர் சிங்கர் சீனியர் என பிரித்து நிகழ்ச்சிகளை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்து. இந்த நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில் கோலோச்சி வருகின்றனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வரும் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்றான சூப்பர் சிங்கர், கடந்த 10 வருடங்களாக வெற்றி நடை போட்டு, தற்போது 11-வது சீசனில் கால் பதிக்க உள்ளது. சூப்பர் சிங்கர் சீனியர் 11-வது சீசன் வரும் ஆகஸ்ட் 2-ம்தேதியில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11-ல் கலந்து கொள்ள உள்ள நடுவர்கள் குறித்த பட்டியல் வெளியாகி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆமாங்க.. இந்த சீசனில் யாருமே எதிர்பாராத வண்ணம் நடுவர்களில் ஒருவராக பிரபல இயக்குனர் மிஷ்கின் களமிறங்க உள்ளார்.
வெள்ளித்திரையில் இயக்குனர் மற்றும் நடிகராக தனது திறமையான நடிப்பால் புகழ்பெற்ற மிஷ்கின், இப்போது சின்னதிரையில் இசை நிகழ்ச்சிக்கு நடுவராக கால் பதித்து உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த முறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி 4 மண்டலங்களாக அதாவது டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு இந்த பிரிவுகளின் கீழ் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த திறமையான பாடகர்களும், தங்களின் இசை திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.
அதேபோல் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நான்கு ஜட்ஜ்கள் பொறுப்பேற்க உள்ளனர். அந்த வகையில் டெல்டா தமிழ் சார்பாக மிஷ்கினும், சென்னை தமிழ் சார்பாக இசையமைப்பாளர் தமனும், கொங்கு தமிழ் சார்பாக அனுராதா ஶ்ரீராமும், எங்கும் தமிழ் சார்பாக பாடகர் உன்னி கிருஷ்ணனனும் நடுவர்களாக களம் இறங்க உள்ளனர். புதுமையான களம், பல அதிரடி புதுமைகளுடன் இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி வரவுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.