வெப் சீரிஸ் விமர்சனம்: Dhootha!
அமானுஷ்யமும், திகிலும் நிறைந்த வெப் சீரிஸ்!(4.5 / 5)
ஒரு சோம்பலான ஞாயிறு மதியம்.. ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்க்கலாம் என்று யோசித்து, தொலைக்காட்சி 'ஆன்' செய்ய, தற்போது வந்த எந்த திரைப்படத்தையும் ஐந்து நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. (எப்படி எடுத்தாலும் முட்டாள் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.. கொடுமை..சரி அதை விடுங்கள்... அப்போதுதான் திடீரென்று' தூதா 'வெப் சீரிஸ் பார்க்கலாம் என்று தோன்றியது.
(நான் பார்த்த முதல் வெப் சீரிஸ்)
'யாவரும் நலம்' படம் மூலமாக தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த விக்ரம் கே குமாரின் இயக்கத்தில்..'தூதா'. நாக சைதன்யா,பிரியா பவானி சங்கர்,பார்வதி திருவோத்து, பிராச்சி தேசாய் ,ஜெயபிரகாஷ், பசுபதி ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
பத்திரிகை தர்மத்தில்.. கொஞ்சமும் ஈடுபாடு காட்டாத பத்திரிகையாளராக 'சாகர் 'என்ற கதாபாத்திரத்தில் நாக சைதன்யா. புதிதாக தொடங்கப்படும் 'சமாச்சார்' பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ..அவரது மனைவியும் ஒரு பத்திரிகையாளர் ஆனால் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.(இரண்டாவது முறை கர்ப்பத்தினால்) இவர்களுக்கு ஆறு வயதில்ஒரு மகள்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில்... சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்ய அதில் சாகர் குடும்பத்துடன் பங்கேற்கிறார்.
அவருடைய பிஏ அம்ருதா (பிராச்சி தேசாய்) மூத்த பத்திரிகையாளர் (சத்தியமூர்த்தி) ஜெயபிரகாஷ் காந்தியும் அதில் கலந்து கொள்கிறார்கள்.
அவருக்கு ’பத்திரிகை துறைக்கான சித்தாந்தங்களும் கோட்பாடுகளும்’ என்ற நூலை பரிசளிக்கிறார் மூத்த பத்திரிகையாளர்... ஆனால் அதை சாகர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கூடவே ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். காரணம் பத்திரிகை தர்மம் போன்ற விஷயங்களில் கொஞ்சமும் ஈடுபாடு காட்டாத பத்திரிகையாளர் அவர்.
விழா முடிந்து திரும்பும் வழியில் பெட்ரோல் இல்லாமல் கார் ஓரிடத்தில் நிற்க.. அப்போது அருகில் இருக்கும் தாபாவில் உணவு வாங்கி வர செல்கிறார். அந்த உணவகத்தில் அவர் உட்கார்ந்து இருக்கும் மேஜையில் ஒரு செய்தித்தாளின் கிழிந்த துண்டு(எண்ணெய் தோய்ந்த) கிடைக்கிறது. அதில் ஒரு குறுக்கெழுத்து புதிர் இருக்கிறது. அதனை படிக்கும் அவர் மிகவும் அதிர்ச்சி அடைகிறார். காரணம் அதில் அவரின் இறந்து போன நாயின் பெயர் என்ன என்ற கேள்வி எழுதி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த செய்தித்தாளில் அடுத்த நாளின் தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது தொடர்ந்து சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை எதிர்காலத்தை பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
இப்படி எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்கள் அனைத்தும் செய்தித்தாள் துணுக்குகளின் மூலம் முன்னரே தெரியவர அவரின் மகிழ்ச்சி பறிபோகிறது. இங்குதான் கதை ஆரம்பமாகிறது.. அதனைத்தொடர்ந்து
சாகர் குற்றங்களில் ஈடுபட..உயர் போலிஸ் அதிகாரி குற்றவாளிகளைப் பிடிக்க நியமிக்கப்பட...
சாகரை குறி வைப்பது யார்? செய்தித்தாள் துணுக்குஉணர்த்துவது என்ன? யார் அந்த தூதர்? அவருடைய பின்னணி... இதுதான் மீதம் உள்ள கதை.
எந்நேரமும் பெய்யும் மழையால் அமானுஷ்ய உணர்வு தொடர் எங்கும் சில்லிடுகிறது. மிக்கோலஜ் சைகுளாவின் ஒளிப்பதிவு... மற்றும் வருண் வேணுகோபாலின் ஒலி அமைப்பு வேற லெவலில் இருக்கிறது.
கதையின் அனைத்து சிறிய இழைகளும் இறுதியில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மிகச் சரியாகப் பொருந்துவது... பத்திரிகை துறையை சார்ந்த கதைக்கு பொருத்தமான தலைப்பு வைத்தது.. வழக்கத்திற்கு மாறான ஒரு கதையை சொன்னவிதத்திற்காக.. விக்ரம் கே.குமாரை மனம் திறந்து பாராட்டலாம்.
மழை பெய்யும் அந்த இரவு.. செய்தித்தாளின் கிழிந்த துண்டுகள்.. மஞ்சள் நிற ஜெர்க்கின் அணிந்த நபர்.. கிளைமாக்ஸில் பிரியாவைக் கொல்ல வரும் பின்னணி... பிளாஷ்பேக்.. கடற்கரையோரத்தில் அமைந்த லைட் ஹவுஸ் அங்கிருக்கும் பிரிண்டிங் மிஷின்
அறை முழுவதும் குவிந்து கிடக்கும் செய்தித்தாள் துணுக்குகள், பண்ணை வீடு பின்னணியில் நிகழும் கொலை... இப்படி அனைத்து எபிசோடுகளும் மழை.. மழை மழையிலே நடக்கின்றன.
துல்லியமான எழுத்து.. திறமையான தொழில்நுட்பக் குழு..
பேராசை ,அதிகாரமோகம் ,வஞ்சகம் ஆகியவை பத்திரிகை துறையின் அடிப்படை தூண்களான உண்மை, துல்லியம்,நேர்மை ஆகியவற்றை அழிக்கின்றன என்பதை மிக அழகாக தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இறுதி அத்தியாயத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் பிளாஷ்பேக் கதாபாத்திரங்களுடன் ஒட்ட வைத்த முயற்சி' வாவ்' சொல்ல வைக்கிறது. அவ்வப்போது ஜென்டில்மேன், அந்நியன், சலீம் போன்ற படங்கள் நினைவுக்கு வந்தாலும் வழக்கத்திற்கு மாறானதொரு கதையை சொன்ன விதத்தில் இயக்குனரை மனம் திறந்து பாராட்டலாம்.