
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் பிக்பாஸுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பிரதர் என்கிற நிகழ்ச்சியைதான், இந்தியாவில் பிக் பாஸ் என்கிற பெயரில் பல மொழிகளில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. எந்த சீசனுக்கும் இல்லாத வரவேற்பு கடந்த பிக் பாஸ் 8வது சீசனுக்கு இருந்தது. இந்த சீசனை புதிதாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதுவரை உள்ள 7 சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு சரிபட்டு வரமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து போட்டியாளர்களிடம் எதையும் சுற்றி வளைத்து பேசாமல் தவறு என்று பட்டதை முகத்திற்கு நேராக அடித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும், பிக் பாஸ் கடந்த சீசன் டி.ஆர்.பியில் பெரிய அடி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
நிகழ்ச்சி நடக்கும் 100 நாட்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெளி உலக தொடர்பிலிருந்து முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு, கொடுக்கப்படும் பணிகளையும், டாஸ்க்குகளையும் சிறப்பாக நிறைவேற்றும் ஒருவரே, மக்கள் கொடுக்கும் வாக்குகளின் ஆதரவுடன், பிக்பாஸ் பட்டத்தையும் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் வென்று வெளியில் வருவார். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் 8-வது சீசனில் முத்துக்குமாரன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும், விஷால், பவித்ரா இருவரும் மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
அடுத்த சீசன் மலையாளத்தில் தொடங்கிய நிலையில், தமிழில் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இது குறித்த அதிகார அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியின் டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள அந்த புரோமோவில் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 9 எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இம்முறை பிக்பாஸ் 9 சீசனில் சமூக ஊடக பிரபலங்களும் இதில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளதாகவும், ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்கள், போட்டியாளர்கள் குறித்த தங்களது கருத்துக்களை நேரடியாக பதிவு செய்யும் வகையில் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு மேலும் குதூகலிப்பாக இருக்கும் வகையில் இந்த சீசன் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.