

இந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் மற்றும் பராசக்தி திரைப்படம் வெளியாகாத நிலையில் , இன்று மற்றும் நாளை (ஜனவரி 9) OTT தளத்தில் வெளியாக உள்ள தமிழ் மற்றும் தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
அங்கம்மாள் :
கீதா கைலாசம் முதன்மை கதாபாத்திரத்தில் அங்கம்மாளாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். கிராமப்புறத்தில் வசித்து வரும் அங்கம்மாள் பண்டைய காலத்தை போலவே ரவிக்கை அணியாமல் சேலை உடுத்தும் பழக்கம் கொண்டவர். அவரது மகனாக இருக்கும் சரண் சக்தி , தனது காதலியை தனது தாயிடம் அறிமுகப்படுத்த எண்ணுகிறார். அப்போது தனது தாய் ரவிக்கை அணிய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதில் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் அடுத்தடுத்து என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை. அங்கம்மாள் திரைப்படம் ஜனவரி 9 வெள்ளிக்கிழமை SUNNXT ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அகண்டா 2: தாண்டவம்
பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் வெற்றி பெற்ற திரைப்படம் அகண்டா 2 . திபத்தில் நடைபெற்ற போரில் இந்திய ராணுவத்திடம் தோல்வியை தழுவிய சீனா , இந்தியாவை பழிவாங்க முடிவு செய்கிறது. இந்தியா மீது பயோ வார் தாக்குதலையும் , இந்தியாவின் ஆன்மீகத்தையும் அழிக்க திட்டமிடுகிறது. இந்த சூழ்நிலையில் பாலகிருஷ்ணா எவ்வாறு சீனாவின் பயோவாரினை முறியடித்தார் , இந்தியாவின் ஆன்மீகத்தை எப்படி காப்பாற்றினார் ? என்பது தான் கதை. இந்த திரைப்படம் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் , ஜனவரி 9 ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாக உள்ளது.
மாஸ்க்:
கவின் , ருஹானி ஷர்மா, ஆன்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் , ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல்வாதியின் ₹440 கோடி பணத்தினை கடத்தும் கும்பலை பற்றியும் , அவர்கள் பணத்தினை திருட காரணம் என்ன என்பதையும் அறியும் ஒரு துப்பறியும் கதை தான் மாஸ்க். ஜனவரி 9 ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பால்டி:
ஷேன் நிகம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படம் இது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் நான்கு இளம் கபடி வீரர்களின், வாழ்க்கை பற்றிய கதைக்களம் இது. இந்த நண்பர்கள் ரவுடிகளிடம் சிக்கிக் கொள்ளும் பொழுது , அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாற்றமடைகிறது என்பதுதான் கதை. நட்பு, துரோகம் மற்றும் பழிவாங்கல் ஆகியவை கலந்த கதை. பால்டி திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் Amazon Prime ஓடிடி தளத்தில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
கான்ஸ்டபிள் கனகம்:
வர்ஷா பொல்லம்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான கான்ஸ்டபிள் கனகம் என்ற வெப் தொடரின் இரண்டாம் பாகம் இது. திரில்லரும் சுவாரசியமும் கொண்ட இந்த தெலுங்கு மொழி தொடர் , இன்று ஜனவரி 8 ஆம் தேதி ETV WIN ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜிக்ரிஸ்:
ராம் நிதின் , கிருஷ்ண பருகுலா ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு மொழி நடைச்சுவை திரைப்படம் இது. இளம்வயது நண்பர்கள் சேர்ந்து, மாருதி 800 காரில் கோவா செல்லும் நகைச்சுவை மிகுந்த பயணத்தின் கதை தான், இந்த படத்தின் திரைக்கதை. இந்த திரைப்படம் SUNNXT ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.