புதுமையான இணையத் தொடர் ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’

புதுமையான இணையத் தொடர் ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’
Published on

மிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின் அடுத்த படைப்பாக வெளிவருகிறது, ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’ இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்தத் தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க நடனத்தைப் பின்னணிக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தத் தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்று முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இந்தத் தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, எடிட்டர் ஆண்டனி, டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர், இசையமைப்பாளர் சாம் CS, நடன இயக்குநர்கள் நாகேந்திர பிரசாத், ராஜு சுந்தரம், இயக்குநர்கள் பாலா, விஜய், நடிகர் ஜீவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படத்தைக் குறித்துப் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, “டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை. ஏனென்றால், டான்ஸை வைத்து ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால், விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்னவென்பதைத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதைப் பேசும், இந்தப் படைப்பு நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

விழாவில் நடிகர் ஜீவா பேசும்போது, ‘‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் என்பது டான்ஸ் ஸ்டெப். இதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்தத் தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்தத் தொடரைப் பார்க்க நானும் மிகவும் ஆவலாக உள்ளேன்” என்றார்.

இயக்குநர் விஜய் இந்த நிகழ்வில் பேசுகையில், “பாலா சார் எனது மானசீக குரு. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்தத் தொடருக்கு மூன்று ஹீரோக்கள். பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி ஆகிய இம்மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். இந்தத் தொடரில் நடித்துள்ள குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இம்மாதிரி தொடர் வெளியாவது இந்தியாவில் இதுவே முதல் முறை. இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com